வேலூர் தங்கும் விடுதியில், கர்ப்பிணி மனைவியுடன், ராணுவ வீரர் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
வேலூர் தங்கும் விடுதியில் ராணுவவீரர் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய கர்ப்பிணி மனைவி கட்டிலில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
வேலூர்,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள கீழ்ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 35). ஜம்மு-காஷ்மீரில் ராணுவவீரராக பணியாற்றி வந்தார். புருஷோத்தமனுக்கும், கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த அமலு (26) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் பெண்குழந்தை உள்ளது. தற்போது அமலு கர்ப்பமாக இருந்தார்.
புருஷோத்தமனின் தந்தை ஆறுமுகத்துக்கு (75) கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து அவர் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்காரணமாக கடந்த 25-ந் தேதி புருஷோத்தமன் ஜம்மு-காஷ்மீரில் இருந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் மனைவியுடன் சென்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தந்தையை பார்த்தார்.
பின்னர் கணவன்-மனைவி இருவரும் மருத்துவமனையின் எதிரே உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் இருவரும் அறையை விட்டு வெளியே வரவில்லை. மருத்துவமனையில் ஆறுமுகத்துடன் தங்கியிருந்த உறவினர்கள் புருஷோத்தமன், அமலு ஆகியோரின் செல்போன் எண்களை தொடர்பு கொண்டனர். நீண்ட நேரமாக ‘ரிங்’ அடித்தும் அதனை யாரும் எடுத்து பேசவில்லை. அதனால் சந்தேகம் அடைந்த புருஷோத்தமனின் அண்ணன் ராஜ்குமார் மற்றும் உறவினர்கள் அந்த அறைக்கு சென்று கதவை தட்டினர். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து விடுதியின் மேலாளருக்கு தகவல் தெரிவித்து விட்டு உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு புருஷோத்தமன் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். அமலு கட்டிலில் இறந்து கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று இருவரின் உடலையும் பார்வையிட்டனர். பின்னர் விடுதி மேலாளர், ஊழியர்கள், ராஜ்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதையடுத்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், கணவன்-மனைவி இருவரும் குடும்ப தகராறு அல்லது கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம். விஷம் குடித்து அமலு தற்கொலை செய்தாரா? அல்லது முதலில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பின்னர் புருஷோத்தமன் தற்கொலை செய்து கொண்டாரா? என்று பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும் என்று தெரிவித்தனர். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் இந்த சம்பவம் குறித்து வேலூர் உதவி கலெக்டர் கணேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story