கூலிப்படை ஏவி கணவனை கொல்லமுயன்ற இளம்பெண்ணுடன் செல்போன் கடை உரிமையாளருக்கு தொடர்பு - போலீசார் விசாரணை


கூலிப்படை ஏவி கணவனை கொல்லமுயன்ற இளம்பெண்ணுடன் செல்போன் கடை உரிமையாளருக்கு தொடர்பு - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 28 Aug 2020 12:05 PM IST (Updated: 28 Aug 2020 12:05 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் கூலிப்படையை ஏவி கணவனை கொல்லமுயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இளம்பெண்ணுக்கு செல்போன் கடை உரிமையாளருடன் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில், 

நாகர்கோவில் வடசேரி கேசவ திருப்பாபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 38), புகைப்பட கலைஞர். இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது 2 மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து அவரை கம்பி, கட்டையால் சரமாரியாக தாக்கினர். சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் வந்ததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். படுகாயமடைந்த கணேசை உறவினர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கணேசின் மனைவி காயத்திரி தனது கள்ளக்காதலன் யாசினின் துணையோடு கூலிப்படையை ஏவி கணவனை கொல்ல முயன்றது தெரிய வந்தது. இதற்காக அவர் ரூ.2 லட்சம் பேரம் பேசியுள்ளார். இதையடுத்து மனைவி காயத்திரி, கூலிப்படையை சேர்ந்த விஜயகுமார், கருணாகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் யாசினை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கணேஷ், நேற்று வீடு முழுவதையும் சுத்தம் செய்தார். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கரமான ஆயுதங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

முன்னதாக காயத்திரியின் செல்போன் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நாகர்கோவிலை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் ஒருவருக்கு பணம் கொடுத்துள்ள விவரங்கள் இருந்தன. மேலும் அவருடன் காயத்திரி செல்போனில் அதிக நேரம் பேசியதாகவும் தெரிகிறது.

காயத்திரி மற்றும் செல்போன் கடை உரிமையாளரின் வங்கி கணக்குகளை போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். எனவே இந்த கொலை முயற்சி வழக்கில் அந்த செல்போன் கடை உரிமையாளருக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே, செல்போன் கடை உரிமையாளரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story