தூத்துக்குடி அருகே ரூ.20 லட்சத்தில் குளம் தூர்வாரும் பணி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்


தூத்துக்குடி அருகே ரூ.20 லட்சத்தில் குளம் தூர்வாரும் பணி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 28 Aug 2020 11:00 PM GMT (Updated: 28 Aug 2020 5:11 PM GMT)

தூத்துக்குடி அருகே ரூ.20 லட்சம் செலவில் குளம் தூர்வாரும் பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள குலையன்கரிசல் பெட்டைகுளம் ரூ.20 லட்சம் செலவில் இந்திய ஆயில் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் மூலம் தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி குளம் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது.

தூத்துக்குடி மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை குளங்கள் தூர்வாரப்படுகிறது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் 14 பொதுப்பணித்துறை கண்மாய்களில் சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆயக்கட்டுகாரர்கள் மூலமாகவும் பொதுப்பணித்துறையின் கண்காணிப்பிலும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் அடுத்த மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும்.

மேலும் சமூக பொறுப்பு நிதி மூலம் பல்வேறு குளங்கள் தூர்வரும் பணிகளும் நடந்து வருகின்றன. அதன்படி குலையன்கரிசல் பெட்டைக்குளம் தூர்வாரும் பணி இந்திய ஆயில் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி மூலம் ரூ.20 லட்சம் செலவில் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த குளம் 250 ஏக்கர் பரப்பளவும், சுமார் 1000 ஏக்கர் ஆயக்கட்டு பகுதியும் கொண்டு உள்ளது. இந்த குளத்தில் ஆயிரம்் மீட்டர் நீளத்துக்கு கூடுதல் நீர் தேங்கும் வகையில் தூர்வார திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பணிகள் குலையன்கரிசல் பாசன விவசாயிகள் சங்கத்தின் மூலம் செய்யப்பட உள்ளது.

மேலும் உப்பாத்து ஓடையும் ஸ்பிக் எலக்ட்ரிக்கல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியாக ரூ.28 லட்சம் செலவில் பணிகள் தொடங்கப்பட்டு கரைகள் பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக கூடுதலாக சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.86 லட்சம் கேட்கப்பட்டது. உடனடியாக அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் இந்த மாத இறுதியில் முழுமை பெறும். இதனால் அந்த பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள் தண்ணீர் தேங்காமல் கடலுக்கு செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் குலையன்கரிசல் பகுதியில் ஐ.ஓ.சி.எல். நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெறும் பகுதிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரமைப்பு செயற்பொறியாளர் அண்ணாதுரை, உதவி பொறியாளர் பத்மநாபன், ஐ.ஒ.சி.எல் துணை பொது மேலாளர் கவுதமன், முதுநிலை கட்டுமான மேலாளர் முருகேசன், கட்டுமான மேலாளர் ரமேஷ்பாபு, குலையன்கரிசல் பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபாஷ் செல்வகுமார், கவுரவ தலைவர் வி.பி.ஆர்.சுரேஷ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Next Story