கார் சாகுபடிக்காக கொடுமுடியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்


கார் சாகுபடிக்காக கொடுமுடியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 28 Aug 2020 11:00 PM GMT (Updated: 28 Aug 2020 7:48 PM GMT)

கார் சாகுபடிக்காக, கொடுமுடியாறு அணையில் இருந்து தண்ணீரை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்.

வள்ளியூர்,

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக, கொடுமுடியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 48 அடியாக உயர்ந்தது.

இதையடுத்து கார் பருவ சாகுபடிக்காக, கொடுமுடியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று கொடுமுடியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன்படி கார் பருவ சாகுபடிக்காக நேற்்று காலையில் கொடுமுடியாறு அணையில் இருந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தண்ணீரை திறந்து வைத்தார். அணையில் இருந்து வினாடிக்கு 50 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் வரும் நவம்பர் மாதம் 21-ந் தேதி வரை திறந்து விடப்படுகிறது.

இதன் மூலம் நெல்லை மாவட்டம் நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை தாலுகா பகுதியில் உள்ள வள்ளியூரான் கால்வாய், படலையர் கால்வாய், ஆற்றுக்கால்வாய் ஆகியவற்றின் மூலம் 5,781 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை (ராதாபுரம்), ரெட்டியார்பட்டி நாராயணன் (நாங்குநேரி), முன்னாள் எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன், அதி.மு.க. அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பால்துரை, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் உவரிராஜன் கிருபாநிதி,

முன்னாள் அமைப்பு செயலாளர் நாராயண பெருமாள், பணகுடி முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் லாரன்ஸ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் ராஜா, உதவி பொறியாளர் மூர்த்தி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story