குழந்தைகள் வீட்டில் இருக்கும்போது மெஸ் கட்டணம் கட்டச்சொல்லும் பள்ளிக்கூடங்களை முற்றுகையிடும் பெற்றோர்


குழந்தைகள் வீட்டில் இருக்கும்போது மெஸ் கட்டணம் கட்டச்சொல்லும் பள்ளிக்கூடங்களை முற்றுகையிடும் பெற்றோர்
x
தினத்தந்தி 29 Aug 2020 4:30 AM IST (Updated: 29 Aug 2020 1:56 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் வீட்டில் இருக்கும்போது மெஸ் கட்டணம் கட்டச்சொல்லும் பள்ளிக்கூடங்களை பெற்றோர் முற்றுகையிடும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிக்கூடங்கள் உள்ளன. 500-க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிக்கூடங்களும், ஏராளமான மத்திய கல்வித்திட்ட (சி.பி.எஸ்.இ) பள்ளிக்கூடங்களும் உள்ளன. அரசு பள்ளிக்கூடங்களை விட தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் அதிக மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

கொரோனாவுக்கு முன்புவரை அரசு பள்ளிக்கூடங்களில் குறிப்பிட்ட சில பள்ளிக்கூடங்களை தவிர மற்ற பள்ளிக்கூடங்கள் எல்லாம் மாணவர் சேர்க்கைக்கு மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை இருந்தது. வீட்டின் அருகிலேயே இலவசமாக கற்றுத்தரும் அரசு பள்ளிக்கூடங்கள் இருந்தாலும், தனியார் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை சேர்ப்பதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர்.

இது தவிர்க்க முடியாத சமூக நிகழ்வாக இருந்தது. ஆனால் கொரோனா காலத்தில் ஏற்பட்ட பல வேலை இழப்புகள், வருவாய் இழப்பு போன்றவற்றால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிக்கூடங்களில் சேர்க்க ஆர்வமாக உள்ளனர். கடந்த 17-ந் தேதி அரசு உத்தரவுப்படி அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கியபோது ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிக்கூடங்களில் கொண்டு சேர்த்தனர்.

குறிப்பாக தனியார் மெட்ரிக் பள்ளிக்கூடங்கள், சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவ-மாணவியர்கள் அரசு பள்ளிக்கூடங்களில் சேரும் நிகழ்வு அதிகரித்தது. குறிப்பாக 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கையின்போது ஈரோடு மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படித்த ஏராளமான மாணவ-மாணவிகள் தங்கள் மாற்று சான்றிதழை வாங்கி அரசு மற்றும் அரசு நிதி உதவி பள்ளிக்கூடங்களில் சேர்த்து வருகிறார்கள்.

இந்தநிலையில் தனியார் மெட்ரிக் பள்ளிக்கூடங்கள், சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் அதிக கல்விக்கட்டணம் வாங்குவதாக புகார்கள் வந்து உள்ளன. நேற்று முன்தினம் ஈரோட்டில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் பெற்றோர்கள் குவிந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறும்போது, ‘இந்த பள்ளிக்கூடத்தில் கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கல்விக்கட்டணம் மற்றும் புத்தக கட்டணம் வசூல் செய்து விட்டனர். அவர்கள் கேட்ட தொகையை பெற்றோர்கள் அனைவரும் கட்டி இருக்கிறோம். கட்டணம் செலுத்தியவர்களை மட்டுமே ஆன்லைன் வகுப்புகளில் சேர்க்கிறார்கள் என்பதால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கருதி அனைத்து பெற்றோரும் கட்டணம் செலுத்தி விட்டோம்.

இந்தநிலையில் மெஸ் கட்டணம் மற்றும் போக்குவரத்து கட்டணம் செலுத்த வேண்டும் என்று கேட்டு உள்ளனர். மாணவ-மாணவிகள் யாரும் பள்ளிக்கூடத்துக்கு வருவதே இல்லை. அனைவரும் அவரவர் வீட்டில் இருந்து ஆன்லைனில் பாடம் படித்து வருகிறார்கள். வகுப்பறையில் எந்த செலவும் இல்லாமல் இருக்கும்போதே கல்விக்கட்டணம் செலுத்தி இருக்கிறோம். ஆனால் உணவு கட்டணம், போக்குவரத்து கட்டணத்தை செலுத்தச்சொல்வது எந்த வகையில் நியாயம். இதைப்பற்றி கேட்க இங்கு வந்தோம். எங்களை போன்று பாதிக்கப்பட்டு உள்ள பல பெற்றோரும் இங்கு வந்து இருப்பதால், அனைத்து குடும்பங்களும் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிகிறது.

தற்போதைய காலக்கட்டத்தில் வியாபாரம் பாதிப்பு, வருவாய் இழப்பு போன்றவற்றால் பொதுமக்கள் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்படும்போது இதுபோன்று கட்டணங்கள் செலுத்த பள்ளிக்கூட நிர்வாகங்கள் கட்டாயப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதுபோல் விடுதியில் சேருவதாக விண்ணப்பத்தில் குறிப்பிட்ட மாணவ-மாணவிகள் விடுதி கட்டணம் செலுத்தவில்லை என்று ஆன்லைன் வகுப்புகளில் சேர்க்கப்படாமல் உள்ளனர்.

அவர்கள் கல்விக்கட்டணம் முழுவதும் செலுத்திவிட்டனர். இதுபோல் நீட் தேர்வு, என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வுகளுக்கு முழு கட்டணம் செலுத்தாதவர்களுக்கும் வகுப்புகள் தடை செய்யப்பட்டு உள்ளன. ஏற்கனவே உணவு கட்டணம், போக்குவரத்து கட்டணம் செலுத்தியவர்கள் அதை கல்விகட்டணத்தில் குறைத்து கொள்ளுங்கள் என்று கேட்டபோதும் முடியாது என்று மறுக்கிறார்கள். இதுபற்றி நிர்வாகத்திடம் கேட்டால், உங்களால் முடியாவிட்டால் மாற்றுசான்றிதழ் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். தற்போது நாங்கள் மாற்று சான்றிதழ் கேட்டால், பள்ளிக்கூடத்தில் பணிபுரியும் சிலருக்கு கொரோனா தொற்று உள்ளது எனவே உள்ளே விட முடியாது என்று துரத்துகிறார்கள். ஆனால் விற்பனை பிரதிநிதிகள் சர்வசாதாரணமாக உள்ளே சென்று வருகிறார்கள்’ என்றனர்.

இதற்கிடையே தனியார் பள்ளிக்கூடங்கள் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்கள் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் வராது. எனவே கல்வி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எழுத்துப்பூர்வமாக புகார்கள் வந்தால், அதை விசாரித்து மேலிடத்துக்கு கூற முடியும். அதுவும் உத்தரவு வந்தால் மட்டுமே செய்ய முடியும்.

இதுபோல் தனியார் மெட்ரிக் பள்ளிக்கூடங்களை பொறுத்தவரை அரசு அறிவிக்கும் கட்டணத்துக்கு மட்டுமே ரசீது கொடுக்கிறார்கள். கூடுதலாக வாங்கும் பணத்துக்கு ரசீது கொடுப்பதில்லை. இது பெற்றோருக்கு தெரிந்தே கொடுக்கிறார்கள். பிரச்சினை என்று வந்ததும் அதை பெரிதாக்குகிறார்கள். அரசு பள்ளிக்கூடங்களில் திறமையான ஆசிரியர்கள், இலவச கல்வி என்று இருந்தாலும் குழந்தைகளை தனியார் பள்ளிக்கூடங்களில் சேர்த்துவிட்டு பின்னர் சிரமப்படுகிறார்கள்’ என்றார்கள்.

Next Story