முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மூத்த மகன் எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா - பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதி


முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மூத்த மகன் எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா -  பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 29 Aug 2020 4:30 AM IST (Updated: 29 Aug 2020 3:28 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மூத்த மகனும், முன்னாள் மந்திரியும், ஒலேநரசிப்புரா தொகுதி எம்.எல்.ஏ.வுமான எச்.டி.ரேவண்ணாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

ஹாசன்,

முதல்-மந்திரி எடியூரப்பா, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மந்திரிகள் சி.டி.ரவி, ஆனந்த்சிங், பி.சி.பட்டீல், ஸ்ரீராமுலு, எஸ்.டி.சோமசேகர், சுயேச்சை எம்.பி. சுமலதா உள்பட 5 எம்.பி.க்களும், சுயேச்சை எம்.எல்.ஏ. சரத் பச்சேகவுடா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்), பா.ஜனதா கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகள் 50 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று கர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தொகுதியில் இருந்து ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் கர்நாடக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் எச்.டி.ரேவண்ணா. இவர் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மூத்த மகனும், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியின் அண்ணனும் ஆவார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எச்.டி.ரேவண்ணாவின் பாதுகாவலர்கள் 9 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு இருந்தது. அதில் 5 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் எச்.டி.ரேவண்ணா தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி இருந்தார். பின்னர் கடந்த சில தினங்களாக அவர் மக்கள் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் எச்.டி.ரேவண்ணாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் அவருக்கு காய்ச்சல், சளி தொல்லையும் இருந்தது. இதனால் எச்.டி.ரேவண்ணா தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் கொரோனா சிகிச்சைக்காக பெங்களூரு பழைய விமான நிலைய ரோட்டில் உள்ள மணிப்பால் ஆஸ்பத்திரியில் எச்.டி.ரேவண்ணா அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

எச்.டி.ரேவண்ணா கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று மந்திரிகள் ஸ்ரீராமுலு, சுதாகர், சி.டி.ரவி உள்ளிட்டோர் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். எச்.டி.ரேவண்ணாவுடன் சேர்ந்து கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்து உள்ளது. குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசில் எச்.டி.ரேவண்ணா மந்திரியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story