மாவட்ட செய்திகள்

அரசு உணவு கிடங்கில் போலீசார் சோதனை: கேரளாவுக்கு கடத்த இருந்த 55 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 5 பேர் கைது - லாரி, கார்கள் சிக்கின + "||" + Police raid government food warehouse Who was to be smuggled to Kerala, 55 tonnes of ration rice confiscated

அரசு உணவு கிடங்கில் போலீசார் சோதனை: கேரளாவுக்கு கடத்த இருந்த 55 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 5 பேர் கைது - லாரி, கார்கள் சிக்கின

அரசு உணவு கிடங்கில் போலீசார் சோதனை: கேரளாவுக்கு கடத்த இருந்த 55 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 5 பேர் கைது - லாரி, கார்கள் சிக்கின
கோட்டேஸ்வர் பகுதியில் உள்ள அரசு உணவு கிடங்கில் போலீசார் நடத்திய சோதனையில் அங்கிருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக கடத்த இருந்த 55 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு லாரி, 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மங்களூரு,

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா கோட்டேஸ்வர் பகுதியில் அரசுக்கு சொந்தமான உணவு கிடங்கு உள்ளது. அரசு சார்பில் ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்வதற்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் மொத்தமாக இந்த கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் இந்த உணவு கிடங்கில் இருந்து ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் உணவு பொருட்கள் பிரித்து அனுப்பப்படும். இந்த நிலையில் ஏழை மக்களுக்கு வழங்குவதற்காக அரசு சார்பில் கொடுக்கப்பட்டிருந்த 55 டன் ரேஷன் அரிசி, ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படாமல் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சப்பாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


இதையடுத்து இன்ஸ்பெக்டர் மஞ்சப்பா, மத்திய குற்றப்பிரிவு போலீசாருடன் அந்த அரசு உணவு கிடங்கிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு லாரியில் ஏராளமான அரிசி மூட்டைகள் ஏற்றி வைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து அங்கிருந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் பாரி, முஸ்தபா தவுபிக், உபேதுல்லா, முகமது மேஸ்ரா, நியாஸ் ஆகியோர் என்பதும், அவர்கள் ஏழைகளுக்கு வழங்குவதற்காக அரசு சார்பில் கொடுக்கப்பட்டிருந்த 55 டன் ரேஷன் அரிசியை உணவுக்கிடங்கில் இருந்தே கள்ளச்சந்தையில் வாங்கி லாரியில் ஏற்றி கேரளாவுக்கு கடத்திச் செல்ல இருந்ததும் தெரியவந்தது.

அதாவது அவர்கள் ரேஷன் அரிசியை வாங்கி அதை பாலிஷ் செய்து புதுப்பித்து கேரளாவிற்கு கடத்திச் சென்று விற்க திட்டமிட்டு இருந்தனர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 55 டன் ரேஷன் அரிசி, ஒரு லாரி, 2 கார்கள், ரூ.3 லட்சம் ரொக்கம் என ரூ.1 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இவ்வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.