அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவி மரணம் - சொந்த ஊரில் உடல் தகனம்


அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவி மரணம் - சொந்த ஊரில் உடல் தகனம்
x
தினத்தந்தி 29 Aug 2020 3:15 AM IST (Updated: 29 Aug 2020 5:15 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவி உடல் நலக்குறைவால் சென்னையில் மரணம் அடைந்தார். அவரது உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

வேதாரண்யம், 

நாகை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மற்றும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக இருப்பவர் ஓ.எஸ்.மணியன். இவருடைய மனைவி கலைச்செல்வி(வயது 61). இவர், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் சிகிச்சை பலனின்றி கலைச்செல்வி மரணம் அடைந்தார். அவரது உடல் நேற்று ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் இருந்து நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே ஓரடியம்பலத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மரணம் அடைந்த கலைச்செல்வி உடலுக்கு அமைச்சர்கள் காமராஜ், துரைக்கண்ணு, தங்கமணி, உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் தமிமுன் அன்சாரி, ராதாகிருஷ்ணன், நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர், போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தியதுடன் ஓ.எஸ். மணியனுக்கு ஆறுதல் கூறினர். நேற்று இரவு 8 மணி அளவில் கலைச்செல்வியின் உடல் அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அருகே உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து குறைந்த அளவு மக்களே கலந்து கொண்டனர். அமைச்சர் ஓ.எ.ஸ். மணியனுக்கு பாரதி, டாக்டர் வாசுகி ஆகிய 2 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story