நீடாமங்கலத்தில், ரெயில்வே மேம்பால பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் - முதல்-அமைச்சரிடம், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை


நீடாமங்கலத்தில், ரெயில்வே மேம்பால பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் - முதல்-அமைச்சரிடம், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை
x
தினத்தந்தி 29 Aug 2020 3:45 AM IST (Updated: 29 Aug 2020 5:34 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலத்தில் ரெயில்வே மேம்பால பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம், டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு செய்தார். அப்போது டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. முதல்்-அமைச்சரை நேரில் சந்தித்து மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்து கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ரெயில்வே மேம்பாலம் பணிகளை உடனடியாக தொடங்கிட வேண்டும். மன்னார்குடி கர்த்தநாதபுரம் பாலத்தை புதுப்பித்து கட்டப்படும் என அறிவித்தீர்கள். ஆனால் இதுவரை அதற்கான எந்தவித பணிகளும் தொடங்கப்படவில்லை. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளுக்கு எந்தவித பாதிப்புமின்றி புதிய பாலம் அமைக்கப்பட வேண்டும். மன்னார்குடி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பணிகளை உடனே தொடங்கிட வேண்டும்.

மகாதேவப்பட்டிணம்-கருவாக்குறிச்சி காட்டாற்றின் பாலத்திற்கான பணிகள் விரைந்து தொடங்கப்பட வேண்டும். கோட்டூர் ஒன்றியம் தெற்கு தென்பரை-பாலையூர் இடையே இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய பாலத்தை அகற்றி புதிய பாலம் அமைத்திட வேண்டும். மன்னார்குடி பஸ் நிலையத்தை புதுப்பித்து நவீனமயமாக்கப்பட வேண்டும். மன்னார்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், அரசு கலைக்கல்லூரிக்கு புதிதாக நூலகம் மற்றும் டிஜிட்டல் நூலகம் கட்டப்படவேண்டும்.

மன்னார்குடியில் விவசாயம் சார்ந்த மெகா புட்பார்்க் அமைக்கப்பட வேண்டும். பாமணி உரத்தொழிற்சாலையை மேம்படுத்தி புதுப்பித்து கட்டப்பட வேண்டும். மன்னார்குடியில் சுற்றுச்சாலை அமைக்க வேண்டும். மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பரவாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டப்பட வேண்டும். நீடாமங்கலம் பேரூராட்சியில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் ஆய்வு நிகழ்ச்சிக்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை. இருப்பினும் முதல்-அமைச்சர் திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் போது நேரில் சென்று தங்களது ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். மன்னார்குடி சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கையை தமிழக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து மனுவாக அளித்துள்ளேன். கர்த்தநாதபுரம் பாலம் போன்ற ஏற்கனவே அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. அதுபோல் மன்னார்குடி நகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதுபோன்ற கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றி தர வேண்டும் என்பதற்காக நேரில் சந்தித்து மனு அளித்தேன். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story