20 நாட்களுக்குள் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் சுகாதாரத்துறை அமைச்சர் நம்பிக்கை


20 நாட்களுக்குள் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் சுகாதாரத்துறை அமைச்சர் நம்பிக்கை
x
தினத்தந்தி 29 Aug 2020 6:26 AM IST (Updated: 29 Aug 2020 6:26 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் இன்னும் 20 நாட்களுக்குள் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.

புதுச்சேரி,

புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் தற்போது கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து உள்ளோம். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இன்னும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளோம். அதற்கான வசதிகள் நம்மிடம் உள்ளது.

மத்திய அரசு அமைத்த 2 குழுக்களும் புதுவையில் ஆய்வு செய்து தனது பரிந்துரைகளை வழங்கி உள்ளன. அந்த குழுக்கள் வழங்கிய பரிந்துரைக்கு முன்பாகவே நாம் அவர்களது பரிந்துரை தொடர்பான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளோம். சிலவற்றை அமல்படுத்தியும் உள்ளோம்.

புதுவையில் கொரோனா பாதிப்பு இன்னும் 15 அல்லது 20 நாட்களுக்குள் கட்டுக்குள் வரும். நாம் முதலில் ஆகஸ்டு மாதத்தில் நாள் ஒன்றுக்கு 400 முதல் 450 பேர் வரை பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதைவிட இப்போது பாதிப்பு அதிகமாக உள்ளது.

மத்திய குழு பரிந்துரைகளை அமல்படுத்த போதிய ஊழியர்கள் இல்லை. இதற்கு டாக்டர்கள், நர்சுகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் என 458 பேர் தேவைப்படுவார்கள். அவர்களை தற்காலிகமாக நியமிக்க கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தால் உடனடியாக பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

நோய் தடுப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களை நியமிக்க காலதாமதம் ஆனால் பாதிப்பு கூடுதலாக இருக்கும். எனவே இந்த விஷயத்தில் கவர்னர், தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் கூடுதல் கவனம் செலுத்தி கோப்பிற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும். இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.

Next Story