பெங்களூருவில் கடத்தப்பட்ட சிறுமி செங்கல்பட்டில் பத்திரமாக மீட்பு


பெங்களூருவில் கடத்தப்பட்ட சிறுமி செங்கல்பட்டில் பத்திரமாக மீட்பு
x
தினத்தந்தி 29 Aug 2020 6:51 AM IST (Updated: 29 Aug 2020 6:51 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கடத்தப்பட்ட சிறுமி செங்கல்பட்டில் பத்திரமாக மீட்கப்பட்டார்.

செங்கல்பட்டு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜே.பி.நகர் அய்யப்பா கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது 42). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ரஷிதா (15). தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். 2 நாட்களுக்கு முன்னர் கணேஷ் வழக்கம் போல நடைபயிற்சி சென்றார். சிறுமி ரஷிதா பால் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றார்.

அப்போது வேனில் வந்த மர்மநபர்கள் 2 பேர், ‘சிறுமியிடம் உன் தந்தைக்கு அடிபட்டு விட்டது. ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டும்’ என்று கூறியுள்ளனர். ரஷிதா தன்னுடைய தாயை அழைத்து வருவதாக கூறியுள்ளார். அதற்குள் அவரை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி கடத்தி சென்று விட்டனர்.

அவர் கூச்சலிடவே அவரது வாய் மற்றும் கையை துணியால் கட்டிய மர்மநபர்கள் நேற்று முன்தினம் மாலை செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில் இறக்கி விட்டு விட்டு சென்று விட்டனர். அழுது கொண்டு நின்ற ரஷிதாவை மீட்ட ஆட்டோ டிரைவர்கள் செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சிறுமியின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ரஷிதா செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டார். நேற்று காலை சிறுமி ரஷிதா அவரது தந்தை கணேஷ் மற்றும் உறவினர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.

Next Story