புதுக்கோட்டையில், கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி - சாவு எண்ணிக்கை 88 ஆக உயர்ந்தது


புதுக்கோட்டையில், கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி - சாவு எண்ணிக்கை 88 ஆக உயர்ந்தது
x
தினத்தந்தி 28 Aug 2020 10:15 PM GMT (Updated: 29 Aug 2020 2:29 AM GMT)

புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகினர். சாவு எண்ணிக்கை 88 ஆக உயர்ந்தது.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டையில் கொரோனா புதிய உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. சுகாதாரத்துறையினரால் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டையில் 3 பேர் பலியாகி இருந்தனர். இதில் சிகிச்சையில் இருந்த 65 வயது முதியவர், 70 வயது மூதாட்டி, 51 வயது ஆண் ஆகிய 3 பேர் ஆவார்கள். இதனால் கொரோனாவுக்கு சாவு எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் நேற்று புதிதாக 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 751 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சைக்கு பின் 112 பேர் வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்து 397 பேர் ‘டிஸ்சார்ஜ்’ ஆகி உள்ளனர். தற்போது 1,266 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதுக்கோட்டையில் உள்ள சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்ட 236 பேரில் இதுவரை 191 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். சித்த மருத்துவ சிகிச்சையில் இறப்பு எண்ணிக்கை இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தது.

கீரமங்கலம் வேம்பங்குடி மேற்கு கிராமத்தில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஊழியர்களுக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் வங்கியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அரிமளம் ஒன்றியத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அரிமளம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 26 பேருக்கும், கல்லூர் சுதந்திரபுரம் பகுதியை சேர்ந்த 25 பேருக்கும் கொரோனா பரிசோதனை நேற்று செய்யப்பட்டது

Next Story