காவேரிப்பட்டணம் அருகே, போலி மதுபானங்கள் தயாரித்த 2 பேர் கைது


காவேரிப்பட்டணம் அருகே, போலி மதுபானங்கள் தயாரித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2020 3:45 AM IST (Updated: 29 Aug 2020 8:26 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணம் அருகே போலி மதுபானங்கள் தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காவேரிப்பட்டணம், 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே போலி மதுபானங்கள் தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வேலூர் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று காவேரிப்பட்டணம் அருகே உள்ள வீடு கொளுத்தி கொட்டாய் கிராமத்திற்கு சென்று தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் வீட்டில் போலி மதுபானங்கள் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பெரியசாமி (வயது 40), தர்மபுரி ஒட்டப்பட்டி ராமகவுண்டர் தெருவை சேர்ந்த சரவணன் (46) ஆகிய 2 பேரையும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய 25 லிட்டர் எரிசாராயம், மதுபாட்டில்கள் சீல் வைக்கும் எந்திரம், காலி மதுபாட்டில்கள், எசன்ஸ், இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான பெரியசாமி 10 ஆண்டுகளுக்கு முன்பு போலி மதுபானங்கள் தயாரித்த வழக்கில் கைதானவர்கள். இவர்கள் 2 பேர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என போலீசார் தெரிவித்தனர்.

Next Story