முதல் போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து நாளை மறுநாள் தண்ணீர் திறப்பு


முதல் போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து நாளை மறுநாள் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 29 Aug 2020 5:15 AM GMT (Updated: 29 Aug 2020 5:10 AM GMT)

வைகை அணையின் நீர்மட்டம் 58 அடியாக உயர்ந்துள்ள நிலையில், முதல்போக பாசனத்திற்காக நாளை மறுநாள் முதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கும், மதுரை மாநகர குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பெய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் வைகை அணையின் நீர்மட்டம் உயரவில்லை.

இதற்கிடையே இந்த மாதத்தின் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதையடுத்து முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாகவும் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

கடந்த 5-ந்தேதி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 30 அடியாகவே இருந்தது. தொடர் மழை மற்றும் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக அணையின் நீர்மட்டம் தற்போது 58 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 22 நாட்களில் மட்டும் நீர்மட்டம் 28 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணைக்கு வினாடிக்கு 1,077 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

வைகை அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதை அடுத்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியின் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. வினாடிக்கு 900 கன அடி வீதம் நீர் இருப்பை பொறுத்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இந்த தகவலை வைகை அணை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story