அவினாசி அருகே, சரக்கு வேன் கவிழ்ந்து 3 பேர் பலி - டயர் வெடித்ததால் விபரீதம்


அவினாசி அருகே, சரக்கு வேன் கவிழ்ந்து 3 பேர் பலி - டயர் வெடித்ததால் விபரீதம்
x
தினத்தந்தி 29 Aug 2020 5:30 AM GMT (Updated: 29 Aug 2020 6:28 AM GMT)

அவினாசி அருகே சரக்கு வேன் கவிழ்ந்து கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலியானார்கள். டயர் வெடித்ததால் இந்தவிபரீத சம்பவம் நடந்தது. இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அனுப்பர்பாளையம்,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 20). கல்லூரி மாணவர். தற்போது கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், கோவை மாவட்டம் நீலாம்பூரில் தங்கி கட்டிட பணிகளுக்கு சென்று வந்தார். இவருடன் சதீஷ்குமார் (25), மணிகண்டன் (55) ஆகியோரும் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை நீலாம்பூரில் இருந்து ஒரு சரக்கு வேன் கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு திருப்பூர் மாவட்டம் அவினாசி நோக்கி புறப்பட்டது. அந்த வேனின் பின் பகுதியில் சுரேஷ், சதீஷ்குமார், மணிகண்டன் மற்றும் பாண்டீஸ்வரன் (22), பாலமுருகன் (22), அருண் (25), விவேக் ஆகியோர் அமர்ந்து இருந்தனர். வேனை பழனிசாமி (40) என்பவர் ஓட்டி வந்தார். டிரைவர் அருகில் பவுன்ராஜ் (25), அரவிந்த் (22) ஆகியோரும் அமர்ந்து இருந்தனர்.

இந்த வேன் கோவை-சேலம் நெடுஞ்சாலையில் அவினாசி அருகே நாதம்பாளையம் பிரிவில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக வேனின் டயர் வெடித்தது. இதனால் நிலை தடுமாறிய வேன் சாலையோரம் திடீரென்று கவிழ்ந்தது. இதில் வேனுக்குள் சுரேஷ், சதீஷ்குமார், மணிகண்டன், பாண்டீஸ்வரன், பாலமுருகன், அருண், விவேக் ஆகியோர் சிக்கி காயம் அடைந்து உயிருக்கு போராடினர். உடனே அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு போகும் வழியில் சுரேஷ் பலியானார். மற்றவர்களுக்கு அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சதீஷ்குமாரும், மணிகண்டனும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமாரும், மணிகண்டனும் இறந்தனர். பாண்டீஸ்வரன், பாலமுருகன், அருண், விவேக் ஆகியோர் அவினாசி ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் திருமுருகன்பூண்டி போலீசார் விரைந்து சென்று, விபத்தில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தில் டிரைவர் பழனிசாமி, மற்றும் அவர் அருகில் இருந்த பவுன்ராஜ், அரவிந்த் ஆகியோர் காயம் இன்றி தப்பினர். அவினாசி அருகே சரக்கு வேன் கவிழ்ந்து 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story