தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 30 Aug 2020 4:15 AM IST (Updated: 29 Aug 2020 11:09 PM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் துறை முன்னணி நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுடன், தனியார் துறை வேலை இணையம் என்ற இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in என்ற முகவரியில் பதிவு செய்தலை ஊக்குவிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, வேலை அளிப்போர் மற்றும் வேலை நாடுநர்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையில், தனியார் துறைகளில் வேலைவாய்ப்பை பெறும் நோக்கத்தில், தனியார் துறை வேலை இணையம் என்ற இணையதளத்தை தொடங்கி வைத்துள்ளார். தனியார் துறை நிறுவனங்களில் வேலை பெற விரும்பும் வேலை நாடுநர்கள், தங்களது விவரத்தை எவ்வித கட்டணமும் இன்றி பதிவு செய்யலாம். இதன் மூலம் தனியார் துறை நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யலாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில், தங்களது நிறுவனங்களின் விவரங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் என சுமார் 1,200 நிறுவனங்கள் உள்ளன. இதுவரை 16 நிறுவனங்கள் மட்டுமே இந்த இணையதளத்தில் பதிவு செய்து உள்ளனர். மீதம் உள்ள நிறுவனங்கள் மற்றும் தனியார் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து அனுப்பும் ஏஜென்சிகளும் இந்த தளத்தில் பதிவு செய்து பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் காலிப்பணியிட விவரங்களை இதில் தெரிவித்தால் தகுதியானவர்கள் இந்த தளத்திலேயே விண்ணப்பிக்க ஏதுவாகும். மாநில அளவில் இந்த இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம். நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை அழைத்து நேர்காணல் மூலம் தேர்வு செய்யலாம். இதில் அரசு தலையீடுகள் ஏதும் இருக்காது.

மேலும் கொரோனா தொற்று காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெளிமாநிலங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் வேலை இழந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு திரும்பி வந்து உள்ளனர். அதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றிய வெளி மாநிலங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி சென்று உள்ளனர். இந்த நிலையில் இங்குள்ள தனியார் நிறுவனங்கள் தங்களது காலிபணியிடங்களை நிரப்புவதற்கு இந்த இணையத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அதேபோன்று வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்களும் இந்த இணையத்தை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெறலாம். இந்த தளத்தின் மூலம் தனியார் நிறுவனங்களில் பணி பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, பொறியியல், டிப்ளமோ, ஐ.டி.ஐ உள்ளிட்ட அனைத்து விதமான கல்வி தகுதி உடையவர்களும், இந்த தளத்தில் பதிவு செய்யலாம். தனியார் நிறுவனங்கள் தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் பேச்சியம்மாள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரம்யா, மகளிர் திட்ட இயக்குனர் ரேவதி, மாவட்ட தொழில்மைய மேலாளர் கண்ணன் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story