சங்கொள்ளி ராயண்ணா சிலை நிறுவிய விவகாரம்: கன்னட அமைப்பினர் மீதான வழக்குகள் வாபஸ் - மந்திரிகள் அறிவிப்பு


சங்கொள்ளி ராயண்ணா சிலை நிறுவிய விவகாரம்: கன்னட அமைப்பினர் மீதான வழக்குகள் வாபஸ் - மந்திரிகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Aug 2020 4:56 AM IST (Updated: 30 Aug 2020 4:56 AM IST)
t-max-icont-min-icon

சங்கொள்ளி ராயண்ணா சிலை நிறுவிய விவகாரத்தில், கன்னட அமைப்பினர் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று மந்திரிகள் அறிவித்து உள்ளனர்.

பெலகாவி,

பெலகாவி அருகே பீரனவாடி பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கன்னட அமைப்பினர், சங்கொள்ளி ராயண்ணா அமைப்பினர் இரவோடு, இரவாக சங்கொள்ளி ராயண்ணா சிலையை நிறுவி இருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீரனவாடியில் வசித்து வரும் மராட்டியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இதனால் கன்னடர்கள்- மராட்டியர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். மேலும் மோதல் சம்பவம் குறித்து 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் அனுமதியின்றி சிலையை நிறுவியதாக சிலர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தார்கள்.

இந்த நிலையில் நேற்று கர்நாடக கிராம பஞ்சாயத்து துறை மந்திரி ஈசுவரப்பா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பெலகாவிக்கு வருகை தந்தார். பெலகாவியில் உள்ள சாம்ரா விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி வரவேற்றார். பின்னர் விமான நிலையத்தில் மந்திரி ஈசுவரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பீரனவாடியில் சங்கொள்ளி ராயண்ணா சிலையை அனுமதியின்றி நிறுவிய கன்னட அமைப்பினர், ராயண்ணாவின் ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும். இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் பேசுவேன். நான்கு நாட்களுக்கு முன்பே பெலகாவிக்கு வர முடிவு செய்து இருந்தேன். ஆனால் பல்வேறு காரணங்களால் எனது பயணம் தள்ளிபோனது. நாட்டின் சுதந்திரத்திற்காக சங்கொள்ளி ராயண்ணாவும், சத்ரபதி சிவாஜியும் போராடி உள்ளார்கள். அவர்கள் பிறந்த இடம் எது, அவர்கள் என்ன மொழி பேசினார்கள் என்பது முக்கியமல்ல. அவர்கள் 2 பேரும் அனைத்து சமூக மக்கள், மதத்தினருக்கு சிறந்த மனிதர்களாக விளங்கினார்கள். பீரனவாடி மோதல் எனக்கு அதிர்ச்சியை அளித்தது. இவ்வாறு அவர் கூறினார்.

மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி நிருபர்களிடம் கூறுகையில், பீரனவாடியில் அமைதியை நிலைநாட்ட கன்னடர்கள், மராட்டியர்கள் ஒத்துழைப்பு கொடுத்தனர். சங்கொள்ளி ராயண்ணா, சத்ரபதி சிவாஜி ஆகியோரை பிரித்து பார்க்க முடியாது. அவர்கள் 2 பேரும் சிறந்த சுதந்திர போராட்ட தியாகிகள். சங்கொள்ளி ராயண்ணா சிலையை அனுமதியின்றி நிறுவியது தொடர்பாக சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெறுவது குறித்து முதல்-மந்திரியிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்றார்.

பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட மந்திரிகள் ஈசுவரப்பா, ரமேஷ் ஜார்கிகோளி நேராக பீரனவாடி கிராமத்திற்கு சென்று அங்கு நிறுவப்பட்டு இருந்த சங்கொள்ளி ராயண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி எம்.எல்.ஏ.வும் கலந்துகொண்டார். சங்கொள்ளி ராயண்ணா சிலைக்கு மந்திரிகள் மாலை அணிவித்த போது கன்னடர்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர்.

கன்னடர்கள்-மராட்டியர்கள் இடையே மோதல் நடந்த பீரனவாடி பகுதியிலும் முழு அமைதி திரும்பியுள்ளது. ஆனாலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.


Next Story