தளி அருகே நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் வாலிபர் காயம்; உறவினர் கைது


தளி அருகே நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் வாலிபர் காயம்; உறவினர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2020 5:37 AM IST (Updated: 30 Aug 2020 5:37 AM IST)
t-max-icont-min-icon

தளி அருகே நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் வாலிபர் காயம்; உறவினர் கைது.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள முதிகேரிதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரப்பா (வயது 25). இவருக்கு முனியம்மா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். பழங்குடி இனத்தை சேர்ந்த ருத்ரப்பா காடுகளில் பாசி எடுக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை ருத்ரப்பா ஜவளகிரி வனப்பகுதியில் உள்ள பனை காப்புக்காட்டில் பாசி எடுக்க சென்றார். அப்போது புதர்மறைவில் இருந்த மர்ம நபர் ஒருவர் ருத்ரப்பாவின் வலதுபுற இடுப்பு பகுதியில் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டார். இதில் காயமடைந்த அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். காட்டுப்பகுதிக்குள் சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஓசூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், தளி இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ், ஜவளகிரி வனச்சரகர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது நேற்று முன்தினம் ருத்ரப்பா மற்றும் கோட்டையூர் பகுதியை சேர்ந்த உறவினர் முருகேசன் (24) ஆகிய 2 பேரும் உரிமம் இல்லாத 2 நாட்டுத்துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்றதும், எதிர்பாராதவிதமாக பன்றி என நினைத்து, ருத்ரப்பாவை துப்பாக்கியால் முருகேசன் சுட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் முருகேசனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 நாட்டுத்துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.

Next Story