செங்குன்றம் அருகே ஏரியில் மீன்பிடித்தபோது வலையில் சிக்கிய நடராஜர் ஐம்பொன் சிலை


செங்குன்றம் அருகே ஏரியில் மீன்பிடித்தபோது வலையில் சிக்கிய நடராஜர் ஐம்பொன் சிலை
x
தினத்தந்தி 30 Aug 2020 6:28 AM IST (Updated: 30 Aug 2020 6:28 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம் அருகே ஏரியில் மீன்பிடித்தபோது நடராஜர் ஐம்பொன் சிலை வலையில் சிக்கியது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த விலாங்காடுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிறுங்காவூர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று விலாங்காடுபாக்கம் மல்லிமாநகர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த முரளி (வயது 36) என்பவர் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது அவரது வலையில் ஒரு தோல் பை சிக்கியது. அதை எடுத்து பார்த்தபோது, அதன் உள்ளே 1½ அடி உயரம், 6 கிலோ எடையுள்ள ஐம்பொன் நடராஜர் சிலை இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து முரளி, செங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் வசந்தன் மற்றும் போலீசார், மீன்பிடி வலையில் சிக்கிய ஐம்பொன் நடராஜர் சிலையை மீட்டு, செங்குன்றம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

அந்த ஐம்பொன் நடராஜர் சிலையை யாராவது மர்மநபர்கள் ஏதோ ஒரு கோவிலில் இருந்து திருடி, தோல் பையில் வைத்து ஏரியில் வீசி இருக்கலாம் என தெரிகிறது. அந்த சிலை எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது?. அதை ஏரியில் வீசியது யார்? என்பது குறித்து விசாரித்து வருவதாகவும், மீட்கப்பட்ட நடராஜர் சிலையை வருவாய் துறையினரிடம் ஒப்படைக்க போவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story