கதிர்காமம் அரசு மருத்துவமனையில் கழிவறையை சுத்தம் செய்த சுகாதார அமைச்சர்


கதிர்காமம் அரசு மருத்துவமனையில் கழிவறையை சுத்தம் செய்த சுகாதார அமைச்சர்
x
தினத்தந்தி 30 Aug 2020 2:19 AM GMT (Updated: 30 Aug 2020 2:19 AM GMT)

புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கழிவறையை சுகாதார அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சுத்தம் செய்தார்.

புதுச்சேரி,

புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அவ்வப்போது கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்ட கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வுகளை நடத்தி வருகிறார். பாதுகாப்பு கவச உடை அணிந்து ஒவ்வொரு வார்டுக்கும் சென்று நோயாளிகளிடம் குறைகேட்டு அவற்றை நிவர்த்தி செய்து வருகிறார்.

அவர் ஆய்வு செய்யும்போது ஆஸ்பத்திரியில் உணவு வகைகள் நன்றாக வழங்கப்படுவதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் கழிவறைகள் சரியாக சுத்தம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் நேற்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆய்வுக்கு சென்றபோது கழிவறை தொடர்பாக நோயாளிகள் குற்றச்சாட்டுகளை கூறினார்கள். இதைத்தொடர்ந்து கழிவறைக்கு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சென்று பார்த்தார். அப்போது நோயாளிகள் கூறியதுபோல் கழிவறை சுகாதாரமற்ற நிலையில் மோசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் தானே செயலில் இறங்கினார்.

அங்கு இருந்த பிரஷ்சை எடுத்து கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் வந்து, அமைச்சரிடம் நான் அந்த பணியை செய்கிறேன் என்று கூறி கழிவறையை சுத்தம் செய்தார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமைச்சரின் அதிரடியான இந்த நடவடிக்கைக்கு நோயாளிகள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story