மாவட்ட செய்திகள்

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு - கொரோனா நோயாளிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் + "||" + At Tenkasi Government Hospital As the ambulance caught fire Corona patients Luckily survived

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு - கொரோனா நோயாளிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு - கொரோனா நோயாளிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுடன் புறப்பட தயாரான ஆம்புலன்ஸ் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் கொரோனா நோயாளிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தென்காசி,

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் கொரோனா நோயாளி ஒருவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மேலும் மற்றொரு கொரோனா நோயாளிக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது.


இதையடுத்து அவர்கள் 2 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி 2 கொரோனா நோயாளிகளையும் ஆம்புலன்சில் ஏற்றினர். அப்போது ஆம்புலன்சில் டிரைவரின் இருக்கைக்கு பின்புறம் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர் காலியாக இருந்தது.

இதனால் ஆம்புலன்ஸ் டிரைவர் இசக்கிராஜன், காலியான ஆக்சிஜன் சிலிண்டரை அகற்றி விட்டு, அங்கு மற்றொரு ஆக்சிஜன் சிலிண்டரை பொருத்திக் கொண்டிருந்தார். அப்போது அதில் எதிர்பாராதவிதமாக திடீரென்று தீப்பிடித்தது. உடனே டிரைவர் இசக்கிராஜன் மற்றும் மருத்துவ ஊழியர் அதிர்ச்சி அடைந்து, ஆம்புலன்சில் இருந்த 2 கொரோனா நோயாளிகளையும் கீழே இறக்கி விட்டனர்.

சிறிது நேரத்தில் ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் ஆம்புலன்ஸ் முழுவதும் தீ மளமளவென்று பரவி, கொழுந்து விட்டு எரிந்தது.

இதுகுறித்து தென்காசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஆம்புலன்சில் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீவிபத்தில் ஆம்புலன்ஸ் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.

தீ விபத்து நிகழ்ந்ததும், ஆம்புலன்சில் இருந்த 2 கொரோனா நோயாளிகளையும் உடனடியாக கீழே இறக்கி விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தொடர்ந்து அவர்களை மாற்று ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும் அவர்கள், தென்காசி அரசு ஆஸ்பத்திரியிலேயே தொடர்ந்து சிகிச்சை பெறுவதாக கூறியதால், அங்கு வைத்தே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுடன் புறப்பட தயாரான ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.