விக்கிரமசிங்கபுரத்தில் கார் டிரைவருக்கு அரிவாள் வெட்டு 5 பேருக்கு வலைவீச்சு


விக்கிரமசிங்கபுரத்தில் கார் டிரைவருக்கு அரிவாள் வெட்டு 5 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 31 Aug 2020 3:30 AM IST (Updated: 31 Aug 2020 2:12 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரத்தில் கார் டிரைவரை அரிவாளால் வெட்டிய 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விக்கிரமசிங்கபுரம்,

விக்கிரமசிங்கபுரம் பசுக்கிடைவிளையைச் சேர்ந்த தம்பதி, நேற்று முன்தினம் அகஸ்தியர்புரத்தில் நடந்த உறவினரின் திருமண விழாவுக்கு சென்றனர். பின்னர் இரவில் அவர்கள், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தங்களது ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை 2 மோட்டார் சைக்கிள்களில் 5 மர்மநபர்கள் பின்தொடர்ந்தவாறு சென்றனர்.

இதுகுறித்து அவர்கள், உறவினரான வடக்கு அகஸ்தியர்புரத்தைச் சேர்ந்த இன்னாசி மகன் பிரகாசுக்கு (வயது 26) செல்போனில் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு மோட்டார் சைக்கிளில் பிரகாஷ் சென்றார். இதற்கிடையே அந்த தம்பதி, மோட்டார் சைக்கிளில் தங்களது வீட்டுக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் அங்கு சென்ற பிரகாஷிடம், அந்த மர்மநபர்கள் தகராறு செய்து, அவரது செல்போனை பறித்தனர். இதையடுத்து பிரகாஷ் அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் வடக்கு அகஸ்தியர்புரத்துக்கு திரும்பி வந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள், வடக்கு அகஸ்தியர்புரத்தில் நின்ற கார் டிரைவரான சகாய பிரவீனிடம் (38), பிரகாஷின் வீடு எங்கே? என்று கேட்டு தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த சகாய பிரவீனை அம்பை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரை அரிவாளால் வெட்டிய 5 மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story