மாவட்ட செய்திகள்

நடிகர் வடிவேல் திரைப்பட நகைச்சுவை பாணியில்: 5 கணவர்களை உதறிவிட்டு 6-வதாக வாலிபரை கரம் பிடித்த 38 வயது பெண் காதலுக்கு எதிர்ப்பு - பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் + "||" + Brushing off 5 husbands 6th Youth Hand Grab 38-year-old woman resists love Asylum in the police asking for security

நடிகர் வடிவேல் திரைப்பட நகைச்சுவை பாணியில்: 5 கணவர்களை உதறிவிட்டு 6-வதாக வாலிபரை கரம் பிடித்த 38 வயது பெண் காதலுக்கு எதிர்ப்பு - பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

நடிகர் வடிவேல் திரைப்பட நகைச்சுவை பாணியில்: 5 கணவர்களை உதறிவிட்டு 6-வதாக வாலிபரை கரம் பிடித்த 38 வயது பெண் காதலுக்கு எதிர்ப்பு - பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்
நடிகர் வடிவேல் திரைப்பட நகைச்சுவை பாணியில் 5 கணவர்களை உதறிவிட்டு 6-வதாக ஒரு வாலிபரை 38 வயதான பெண் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் சிக்கமகளூருவில் நடந்துள்ளது. பின்னர் அந்த பெண்ணும், அவருடைய 6-வது காதல் கணவரும் தங்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் பாதுகாப்பு அளிக்கும்படி கோரி போலீசில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
சிக்கமகளூரு,

நடிகர் அர்ஜூன் நடித்துள்ள தமிழ் திரைப்படமான மருதமலை படத்தில் பிரபல நடிகர் வடிவேல் நடித்த ஒரு நகைச்சுவை காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த படத்தில் நடிகர் வடிவேல் போலீஸ் ஏட்டாக நடித்து இருப்பார். அவர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருக்கும் நேரத்தில், போலீஸ் நிலையத்திற்கு ஒரு காதல் ஜோடி மாலையுடன் திருமண கோலத்தில் ஓடிவரும்.


அவர்கள் தாங்கள் காதலர்கள் என்றும், தங்கள் காதலுக்கு பயங்கர எதிர்ப்பு இருப்பதாகவும், காதல் திருமணம் செய்து கொண்ட தங்களை சிலர் பிரிக்க நினைப்பதாகவும் புகார் தெரிவிப்பார்கள். மேலும் தங்களை எப்படியாவது சேர்த்து வையுங்கள் என்றும் அந்த பெண் கூறுவார்.

இதையடுத்து நடிகர் வடிவேல், அவர்களை சேர்த்து வைப்பதாக உறுதி அளிப்பார். அப்போது அங்கு 5 பேர் வருவார்கள். அவர்களிடம் நடிகர் வடிவேல் விசாரணை நடத்தும்போது, அவர்கள் 5 பேரும் அந்த பெண்ணின் முன்னாள் கணவன்கள் என்பது தெரியவரும். அதாவது 5 முறை திருமணம் செய்துவிட்டு, 6-வது முறையாக ஒரு வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு அந்த பெண் போலீஸ் நிலையத்திற்கு வந்திருப்பார்.

இதைக்கேட்டு நடிகர் வடிவேல் அதிர்ச்சியில் உறைந்துபோவார். பிரபலமான நகைச்சுவை காட்சியான இச்சம்பவம்போல் உண்மையிலேயே சிக்கமகளூரு மாவட்டம் கம்பினஹள்ளி கிராமத்தில் நடந்துள்ளது. அதாவது நேற்று காலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சந்துரு(வயது 22), என்ற வாலிபர் ஒரு பெண்ணுடன் அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அவர் தானும், அந்த பெண்ணும் காதலர்கள் என்றும், தங்களுடைய காதலுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருப்பதாகவும், தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படியும் கோரிக்கை விடுத்தார். மேலும் தாங்கள் திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். சிறிது நேரத்தில் போலீஸ் நிலையத்திற்கு 5 பேர் வந்தார்கள்.

அவர்கள் சந்துரு அழைத்து வந்தது தங்களுடைய மனைவி என்று கூறினார்கள். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த பெண்ணை அழைத்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது அவர்கள் சிக்கமகளூருவை சேர்ந்த பசவராஜ், பெங்களூருவைச் சேர்ந்த கிரண், ரமேஷ், துக்காராம் மற்றும் ஒரு வாலிபர் ஆவர்.

அவர்கள் 5 பேரையும் அந்த பெண் காதலித்து திருமணம் செய்து சிறிது காலம் குடும்பம் நடத்திவிட்டு தலைமறைவாகி உள்ளார். அதில் 2 பேருடன் குழந்தையும் பெற்றுள்ளார் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தனது பெயர் பிரியா என்பதையும், தனக்கு 38 வயது ஆவதையும் ஒப்புக் கொண்டார்.

மேலும் தான் பசவராஜ், கிரண், ரமேஷ், துக்காராம் உள்பட 5 பேரை ஏற்கனவே காதலித்து திருமணம் செய்து கொண்டதையும், சில காலம் அவர்களுடன் குடும்பம் நடத்திவிட்டு தலைமறைவாகி விட்டதையும் ஒப்புக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் தற்போது சந்துருவை தான் தீவிரமாக காதலித்ததாகவும், 6-வதாக அவரை திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்தான் தனக்கு வேண்டும் என்றும் அடம்பிடித்தார்.

கள்ளக்காதலில் இதுவும் ஒரு வகை என்று சந்துருவுக்கு போலீசார் புரியவைத்தனர். இருப்பினும் அவர் 38 வயதான தனது காதலிதான் தனக்கு வேண்டும் என்றும், அவர் ஏற்கனவே 5 திருமணம் செய்திருப்பது குறித்து தனக்கு கவலை இல்லை என்றும் தெரிவித்துவிட்டார். மேலும் சந்துருதான் தனக்கு வேண்டும் என்று பிரியாவும் விடாப்பிடியாக இருந்தார்.

ஆனால் பிரியா தான் தங்களது வாழ்க்கைத் துணையாக வேண்டும் என்றும் பசவராஜ் உள்ளிட்ட முன்னாள் கணவன்கள் 5 பேரும் அழுது புரண்டனர். போலீசார் பிரியாவுக்கு எவ்வளவோ அறிவுரை வழங்கியும் அவர் கேட்கவில்லை. சந்துருவுடன்தான் வாழ்வேன் என்று திட்டவட்டமாக கூறினார்.

22 வயதான சந்துருவுக்கு தாய்-தந்தை இல்லை. அவர் தனது அக்காளின் பராமரிப்பில்தான் இருந்து வந்தார். இதையடுத்து போலீசார் சந்துருவின் அக்காவை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். பின்னர் சந்துருவிடம், அவருடைய அக்காள் பேசி பல அறிவுரைகளை வழங்கினார். ஆனால் சந்துரு எதற்கும் அசைவு கொடுக்கவில்லை.

இதனால் செய்வதறியாது திகைத்த போலீசார் முறைப்படி விவாகரத்து பெறாமல் சந்துருவை திருமணம் செய்து கொண்டதாக பிரியா மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் நேற்று சிக்கமகளூருவில் பரபரப்பாகவும், நகைச்சுவையாகவும் பேசப்பட்டது.