கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல் மருத்துவக் கல்லூரியில் ஆயுர்வேத, சித்தா சிகிச்சை மையம் முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவு


கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல் மருத்துவக் கல்லூரியில் ஆயுர்வேத, சித்தா சிகிச்சை மையம் முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவு
x
தினத்தந்தி 31 Aug 2020 12:30 AM GMT (Updated: 31 Aug 2020 12:30 AM GMT)

புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல் மருத்துவக் கல்லூரியில் ஆயுர்வேத, சித்தா சிகிச்சை மையம் தொடங்க முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் மாகி பகுதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளரும், மாவட்ட கலெக்டருமான அருண், இயக்குனர் மோகன்குமார் மற்றும் மருத்துவ அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். அப்போது ஆயுர்வேத மருத்துவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்தா, ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளிக்க மருந்துகள் உள்ளது. அதன் மூலம் நோயாளிகளை முழுமையாக குணப்படுத்த முடியும். எனவே அதனை நடைமுறைப்படுத்த மாநில அரசு உதவ வேண்டும் என்று கூறினர்.

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத்துறை செயலாளரும், மாவட்ட கலெக்டருமான அருணிடம், புதுவை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தனியாக இடம் ஒதுக்கி அங்கு சித்தா, ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கான மையம் விரைவில் தொடங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் விருப்பமுள்ளவர்கள் மட்டும் அங்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார்.

Next Story