கன்னியாகுமரி தொகுதி வசந்தகுமார் எம்.பி. உடல் சொந்த ஊரில் அடக்கம் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு


கன்னியாகுமரி தொகுதி வசந்தகுமார் எம்.பி. உடல் சொந்த ஊரில் அடக்கம் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
x
தினத்தந்தி 31 Aug 2020 6:33 AM IST (Updated: 31 Aug 2020 6:33 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி தொகுதி வசந்தகுமார் எம்.பி. உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் (வயது 70). இவர், கடந்த 10-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட அவர், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமானதை தொடர்ந்து சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 28-ந் தேதி மாலையில் உயிரிழந்தார்.

வசந்தகுமார் எம்.பி. உடல், சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அவரது சொந்த ஊரான குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்துக்கு தனி ஆம்புலன்ஸ் மூலம் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு கொண்டு வரப்பட்டது.

உடலுக்கு அஞ்சலி

அங்கு குமரி அனந்தன் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. உடலின் அருகில் அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி கண்ணீர் விட்டு கதறியபடி இருந்தார். மகன்கள் வசந்த் விஜய், வினோத்குமார், மகள் தங்கமலர் ஆகியோரும் அருகில் இருந்தனர். வசந்தகுமார் எம்.பி. உடலுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து நேற்று காலை வரை விடிய விடிய காங்கிரசாரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

நேற்று காலையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, ஜோதிமணி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), பிரின்ஸ் (குளச்சல்), சுரேஷ்ராஜன் (நாகர்கோவில்), ஆஸ்டின் (கன்னியாகுமரி), மனோதங்கராஜ் (பத்மநாபபுரம்), அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்), பூங்கோதை (ஆலங்குளம்), கேரள மாநிலம் மாவேலிக்கரை காங்கிரஸ் எம்.பி. கொடிக்குந்நில் சுரேஷ், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராபர்ட் புரூஸ், மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன் (அ.தி.மு.க.), செந்தில் முருகன் (அ.ம.மு.க.), அமுதன் (தே.மு.தி.க.), செல்லசாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), இசக்கிமுத்து (இந்திய கம்யூனிஸ்டு), பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார், நாடார் மகாஜன சங்க துணை தலைவர் சுரேந்திரகுமார், ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாவட்ட தலைவர்கள் பினுலால் சிங் (கிழக்கு), சாமுவேல் ஜார்ச் (மேற்கு) உள்பட பலர் வசந்தகுமார் எம்.பி. உடலுக்கு மாலை அணிவித்தும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினார்கள். இதுதவிர நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டம் மட்டும் அல்லாது தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் கட்சி வேறுபாடு இன்றி வந்து, வசந்தகுமார் எம்.பி. உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இறுதி ஊர்வலம்

அதைத்தொடர்ந்து இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் தொடங்கின. காலை 9 மணிக்கு வசந்தகுமார் எம்.பி.யின் மகன்கள் வசந்த் விஜய், வினோத்குமார் ஆகியோர் நீர்மாலை எடுத்து வந்தனர். வீட்டில் இறுதி சடங்குகள் முடிவடைந்ததும் வசந்தகுமார் எம்.பி. உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றப்பட்டது.

வீட்டில் இருந்து காலை 9.30 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. வீட்டில் இருந்து சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குடும்ப கல்லறை தோட்டத்துக்கு வசந்தகுமார் எம்.பி. உடல் எடுத்து செல்லப்பட்டது. அப்போது வழிநெடுகிலும் மலர் தூவரப்பட்டது. காங்கிரசாரும், பொதுமக்களும் வீர வணக்கம்... வீர வணக்கம்... என்ற கோஷங்கள் எழுப்பினர். உடலை எடுத்து சென்ற வாகனத்தின் முன்னும், பின்னும் ஏராளமானவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

அடக்கம்

உடலை அடக்கம் செய்ய ஏற்கனவே கல்லறை தோட்டத்தில் வசந்தகுமார் எம்.பி.யின் மூதாதையர் கல்லறைக்கு அருகே குழி தோண்டப்பட்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதனையடுத்து உடலை கொண்டு வந்ததும் முறைப்படி இறுதி சடங்குகள் நடந்தன. அப்போது மகன்கள் விஜய் வசந்த் மற்றும் வினோத்குமாருக்கு மொட்டை அடிக்கப்பட்டது. இறுதி சடங்குகள் முடிந்ததும் வசந்தகுமார் எம்.பி.யின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

வசந்தகுமார் எம்.பி. உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த அகஸ்தீஸ்வரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதாவது துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கணேசன் ஆகியோர் தலைமையில் சுமார் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story