திருப்பூரில் பாறைக்குழி நீரில் மூழ்கி அண்ணன்-தங்கை பலி குளிக்க சென்ற போது பரிதாபம்


திருப்பூரில் பாறைக்குழி நீரில் மூழ்கி அண்ணன்-தங்கை பலி குளிக்க சென்ற போது பரிதாபம்
x
தினத்தந்தி 31 Aug 2020 6:57 AM IST (Updated: 31 Aug 2020 6:57 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பாறைக்குழியில் குளிக்க சென்ற போது நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி அண்ணன்-தங்கை பரிதாபமாக உயிரிழந்தனர்.

அனுப்பர்பாளையம்,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி ஈஸ்வரி (வயது 30). இவர்களுடைய குழந்தைகள் சரவணக்குமார் (10), ரோஷினி (8). கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஈஸ்வரி கணவரை பிரிந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு திருப்பூருக்கு வந்தார். பின்னர் அவர் திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் ராதாகிருஷ்ணன் வீதியில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

மேலும் ஈஸ்வரி அந்த பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார். அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சரவணக்குமார் 6-ம் வகுப்பும், ரோஷினி அதே பள்ளியில் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகள் இருவரும் வீட்டிலேயே இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல ஈஸ்வரி வியாபாரத்திற்காக வெளியே சென்று விட்டார். மாலை வீட்டிற்கு சென்றபோது குழந்தைகள் இருவரும் வீட்டில் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி அக்கம் பக்கத்தினர் வீடுகளில் சென்று குழந்தைகளை தேடிப்பார்த்தார். அங்கும் குழந்தைகள் இல்லை.

பாறைக்குழியில் மிதந்த உடல்கள்

இதையடுத்து அவர் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்றுகாலை அம்மாபாளையத்தை அடுத்த நெசவாளர் காலனி பகுதியில் உள்ள ஒரு பாறைக்குழியில் குழந்தையின் உடல் ஒன்று மிதப்பதாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர போலீஸ் வடக்கு உதவி கமிஷனர் வெற்றிவேந்தன், இன்ஸ் பெக்டர் சொர்ண வள்ளி சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், விவேக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ஒரு சிறுமியின் உடல் பாறைக்குழி தண்ணீரில் மிதந்துகொண்டிருந்தது.

பாறைக்குழியின் கரையில் 2 பேரின் ஆடைகள் மற்றும் செருப்புகள் கிடந்தன. இதனால் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இந்த நிலையில் சிறிது நேரத்தில் மற்றொரு சிறுவனின் உடலும் தண்ணீரில் மிதந்தது. இதையடுத்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு, தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் 2 குழந்தைகளின் உடல்களும் அங்கிருந்து மீட்கப்பட்டது.

அடையாளம் காட்டினார்

இதற்கிடையில் குழந்தைகள் இருவரையும் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்திருந்த ஈஸ்வரி சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டு பிணமாக மீட்கப்பட்ட சிறுவர், சிறுமியின் உடல்களை போலீசார் அவரிடம் காட்டினார்கள். அப்போது தண்ணீரில் மூழ்கி இறந்த இருவரும் தன்னுடைய குழந்தைகள்தான் என்று ஈஸ்வரி அடையாளம் காட்டினார்.

மேலும் குழந்தைகளின் உடல்களை பார்த்து அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதையடுத்து 2 உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

பின்னர் அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் நேற்று முன்தினம் மாலை 3 சிறுவர்கள் பாறைக்குழி பகுதிக்கு சென்றதாகவும், அவர்களை அப்பகுதி மக்கள் எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதையும் மீறி 3 பேரும் பாறைக்குழியில் இறங்கி குளித்தபோது நீச்சல் தெரியாததால் 2 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது.

இதில் பலியான சிறுவர்களுடன் குளிக்கச் சென்ற மற்றொரு சிறுவனான அதே பகுதியை சேர்ந்த யோகேஸ்வரன், தன்னுடன் குளிக்க வந்த நண்பர்கள் 2 பேரும் நீரில் மூழ்கியதை யாரிடமும் சொல்லாமல் விட்டதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சிறுவர்களின் உடல்களை பார்ப்பதற்காக சுற்றுவட்டார பொதுமக்கள் பாறைக்குழி அருகே திரண்டனர். திருப்பூர் அருகே பாறைக்குழியில் குளிக்கச் சென்ற அண்ணன்,தங்கை நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story