மாவட்ட செய்திகள்

முகரம் பண்டிகையையொட்டி இந்துக்கள் பூக்குழி இறங்கினர் பெண்கள் தலையில் தீ கங்குகள் கொட்டி நேர்த்திக்கடன் + "||" + Hindus go down to the flower pit on the occasion of Muqaram festival.

முகரம் பண்டிகையையொட்டி இந்துக்கள் பூக்குழி இறங்கினர் பெண்கள் தலையில் தீ கங்குகள் கொட்டி நேர்த்திக்கடன்

முகரம் பண்டிகையையொட்டி இந்துக்கள் பூக்குழி இறங்கினர் பெண்கள் தலையில் தீ கங்குகள் கொட்டி நேர்த்திக்கடன்
முகரம் பண்டிகையையொட்டி திருப்புவனம் அருகே இந்துக்கள் பூக்குழி இறங்கினர். பெண்கள் தலையில் தீ கங்குகளை கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனைச் சேர்ந்தது முதுவன்திடல் கிராமம். இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்கள் அதிக அளவில் வசித்து வந்தனர். பாத்திமாநாச்சியார் என்பவர் நினைவாக முதுவன்திடல் கிராமத்தில் உள்ள மையப்பகுதியில் பள்ளிவாசல் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் பாத்திமாநாச்சியாரை தெய்வமாக வழிபட்டு வந்தனர். நாளடைவில் இங்கு வசித்த முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து வெளியூர்களுக்கு சென்றனர்.


தற்போது இந்துக்கள் மட்டும் இந்த கிராமத்தில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் முகரம் பண்டிகையின்போது பாத்திமா நாச்சியார் நினைவாக 10 நாட்கள் திருவிழா நடத்துவது வழக்கம். இந்த திருவிழாவின்போது திருமணம், குழந்தை வரம், நோய் தீர்த்தல் உள்ளிட்டவைகளுக்காக பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். மேலும் இந்த கிராம மக்கள் இப்பகுதியில் விவசாயம் செய்து அறுவடை செய்த பின்னர் முதலில் பாத்திமா நாச்சியாருக்கு படையல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

தலையில் தீ கங்கு

அதன்படி இந்த ஆண்டும் முதுவன்திடல் கிராமத்தில் கடந்த 21-ந்தேதி தர்காவில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 5-வது நாள் நேர்த்திக்கடன் செலுத்த காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 7-வது நாள் தர்காவில் இருந்து சப்பர பவனி நடைபெற்றது. இதையடுத்து நேற்று அதிகாலை முகரம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி 12 அடி நீளத்தில் ஆழமான குழி தோண்டப்பட்டு பூக்குழி அமைக்கப்பட்டது. பின்னர் காப்புக்கட்டி இருந்த இந்துக்கள் ஊர்வலமாக வந்து அதிகாலை 4 மணிக்கு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து பூ மொழுவுதல் என்று அழைக்கப்படும் பெண்கள் தலையில் தீ கங்கு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நேர்த்திக்கடன் செலுத்த வந்த பெண்கள் தலையில் சேலையை கொண்டு மூடிய நிலையில் பூக்குழி முன்பு அமர வைக்கப்படுவார்கள். பின்னர் அவர்களின் தலையில் பூக்குழியில் இருந்து தீ கங்குகளை எடுத்து 3 முறை தொடர்ந்து கொட்டப்படும். இதேபோல் பல பெண்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து விழாவின் இறுதியாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை பொதுமக்கள் மேள தாளத்துடன் கிராம எல்லை வரை தூக்கி சென்று மீண்டும் தர்காவுக்கு கொண்டு வந்தனர்.