மாவட்ட செய்திகள்

கிருமி நாசினி தெளிப்பு பணி தீவிரம் மாவட்டத்தில் 90 பஸ்களை இயக்க நடவடிக்கை + "||" + Intensity of disinfectant spray work In the district Action to run 90 buses

கிருமி நாசினி தெளிப்பு பணி தீவிரம் மாவட்டத்தில் 90 பஸ்களை இயக்க நடவடிக்கை

கிருமி நாசினி தெளிப்பு பணி தீவிரம் மாவட்டத்தில் 90 பஸ்களை இயக்க நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 90 பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்தது.
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள் பலர் தங்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வேலைக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. சாலைகளில் நெரிசலும் ஏற்பட்டு உள்ளது.


இந்த நிலையில் தமிழக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அரசு பஸ்களை மாவட்டத்துக்குள் இயக்க அனுமதி அளித்து உள்ளது. இதனால் அனைத்து பஸ்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்தது. பஸ்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்காக ஏற்கனவே தூத்துக்குடி-நெல்லை, திருச்செந்தூர்-நெல்லை, கோவில்பட்டி-நெல்லை, தூத்துக்குடி-திருச்செந்தூர் ஆகிய வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படும். மாவட்டத்துக்குள் சுமார் 90 பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி-திருச்செந்தூர், தூத்துக்குடி-ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி-நாசரேத்-சாத்தான்குளம், தூத்துக்குடி-கோவில்பட்டி, தூத்துக்குடி-விளாத்திகுளம், திருச்செந்தூர்-சாத்தான்குளம் உள்ளிட்ட வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதேபோன்று நகர்ப்புறங்களில் டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன. மக்கள் கூட்டத்தை பொறுத்து பஸ்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும். அனைத்து பஸ்களும் முறையாக கிருமி நாசினி தெளித்து தயார் நிலையில் உள்ளன. பஸ்கள் வழக்கம் போல் காலை 5 மணி முதல் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் தற்காலிக பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.