இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடக்கம் இருக்கைகளுக்கு கிருமி நாசினி தெளிப்பு


இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடக்கம் இருக்கைகளுக்கு கிருமி நாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 1 Sept 2020 4:15 AM IST (Updated: 1 Sept 2020 2:03 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது. இதையொட்டி நேற்று பஸ்களில் இருக்கை களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டன.

நெல்லை,

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி ரெயில், பஸ் போக்குவரத்து அடியோடு முடங்கியது. கடந்த ஜூன் மாதம் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கிய போது கொரோனா பரவல் அதிகரித்தது. இதையொட்டி ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மீண்டும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் ஊரடங்கு தளர்வாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அந்தந்த மாவட்டத்துக்குள் பொது பஸ் போக்குவரத்து தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்டி நெல்லை மாவட்டத்துக்குள் மட்டும் பஸ் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. இதையொட்டி நெல்லையில் இருந்து அம்பை, பாபநாசம், திசையன்விளை, ராதாபுரம், வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.

அதே நேரத்தில் கோவில்பட்டி, தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில், சங்கரன்கோவில் உள்ளிட்ட பிற மாவட்ட நகரங்களுக்கு செல்வதற்கு அந்தந்த மாவட்ட எல்லை வரை மட்டுமே இயக்கப்பட இருப்பதால் ஒரே பஸ்சில் மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்டம், விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் போன்ற எந்த அனுமதியும் தேவையில்லை என்பதால் பொதுமக்கள் ஒரே பஸ்சில் செல்ல விரும்புகிறார்கள். தற்போது சோதனை சாவடிகளில் இறங்கி, அடுத்த மாவட்டத்துக்குள் நடந்து சென்று அங்கிருந்து மாற்று பஸ்சில் செல்ல போக்குவரத்து கழக அதிகாரிகள் உரிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பஸ் போக்குவரத்து இன்று தொடங்குவதையொட்டி நேற்று அனைத்து போக்குவரத்து கழக பணிமனைகளிலும் பஸ்களில் இருக்கைகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், “நெல்லை மண்டலத்தில் 1,800 பஸ்கள் உள்ளன.

இன்று முதல் மீண்டும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. பஸ்கள் இயக்கத்தின் போது கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் முழுமையாக கடைபிடிக்கப்படும்.

தற்போது அந்தந்த மாவட்டத்துக்குள் டவுன் பஸ்கள் முழுமையாக இயக்கப்படும். புறநகர் பஸ்கள் குறைந்த அளவு இயக்கப்படும். பயணிகளின் தேவைக்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அரசு வழிகாட்டுதல்படி பஸ்கள் இயக்கப்படும்“ என்றனர்.

பஸ்களில் காலை, மாலையில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். டிரைவர், கண்டக்டர்கள் கண்டிப்பாக முக கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும். பயணிகளும் சமூக இடைவெளியுடன் இருக்கைகளில் அமர வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பணிமனைகளில் இருந்தும் இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்கப்படுகிறது.

Next Story