நெல்லை - தென்காசியில் அனைத்து கோவில்களிலும் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி நுழைவாயிலில் கிருமி நாசினி தெளிப்பு


நெல்லை - தென்காசியில் அனைத்து கோவில்களிலும் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி நுழைவாயிலில் கிருமி நாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 1 Sept 2020 4:30 AM IST (Updated: 1 Sept 2020 2:08 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசியில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக கோவில் நுழைவாயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

நெல்லை,

கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்கவும், மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கவும் அரசு ஊரடங்கு தடை உத்தரவை பிறப்பித்தது. இதையொட்டி கோவில்கள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. சுவாமிகளுக்கு ஆகமவிதிப்படி பூஜைகள் மட்டுமே நடந்தன. சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

நெல்லை மாநகரத்தில் உள்ள நெல்லையப்பர் கோவில், கரியமாணிக்க பெருமாள் கோவில், சாலைகுமாரசாமி கோவில், பேராத்து செல்வி அம்மன் கோவில், புட்டாபுரத்தி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நெல்லையப்பர் கோவிலில் ஆனித்தேரோட்டம், ஆடிப்பூர வளைகாப்பு வைபவம், ஆவணி மூலத்திருவிழா உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெறவில்லை. திருவிழா நாட்களில் சுவாமிகளுக்கு இருப்பிடத்தில் வைத்து அபிஷேக, அலங்கார தீபாராதனை மட்டும் நடந்தது. இந்த நிலையில் ஊரடங்கு தளர்வாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அனைத்து கோவில்களையும் திறந்து பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையொட்டி கோவில் நுழைவாயில்களில் நேற்று சுத்தப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டன.

சாமி தரிசனம் செய்ய வருகிறவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். உள்ளே வரும் போது சானிடைசர் போட்டுக்கொள்ள வேண்டும். பக்தர்கள் அனைவரும் அவர்களுடைய செருப்புகளை அவர்களே எடுத்து ஸ்டாண்டில் வைத்துவிட்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். கோவிலுக்கு பக்தர்கள் தேங்காய் பழம், பூக்கள் எதுவும் கொண்டு வர அனுமதி இல்லை. மீறி கொண்டு வருபவர்கள் அந்த பொருட்களை அர்ச்சகர்கர்கள் கையில் கொடுக்காமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து விட வேண்டும். அர்ச்சனை செய்வது, கோவிலை வலம் வருவது, அபிஷேக தரிசனம் செய்வது, அர்ச்சகர்கர்கள் பக்தர்களுக்கு விபூதி குங்கும பிரசாதங்களை கையில் குடுப்பது போன்றவைகளை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

கால பூஜை காலங்களில் பக்தர்கள் கோவிலுக்குள் வர தடை செய்யப்பட்டுள்ளது. அர்ச்சகர்கர்கள் விபூதி குங்கும பிரசாதங்களை கையில் கொடுக்க கூடாது. பக்தர்களிடம் இருந்து எதுவும் கையில் வாங்க கூடாது. கோவிலுக்குள் பக்தர்கள் இடைவெளி விட்டு மூலவரை தரிசிக்க மட்டுமே அனுமதி. தீபம் ஏற்றவும் தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டு உள்ளது.

தென்காசி காசிவிசுவநாத சுவாமி, செங்கோட்டை குலசேகரநாத சுவாமி உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். முன்னதாக நேற்று கோவில்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டன.

Next Story