போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்ற 2 வாலிபர்கள் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு - தங்கச்சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்தவர்கள்


போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்ற 2 வாலிபர்கள் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு - தங்கச்சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்தவர்கள்
x
தினத்தந்தி 1 Sept 2020 4:20 AM IST (Updated: 1 Sept 2020 4:20 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் தங்கச்சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த 2 வாலிபர்களை பிடிக்க முயன்ற போது, போலீஸ்காரர்களை தாக்கி விட்டு தப்ப முயன்றனர். இதனால் அவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

பெங்களூரு,

பெங்களூரு ராஜாஜிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்லும் பெண்கள், அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பெண்களை குறிவைத்து கடந்த ஒரு வாரமாக மோட்டார் சைக்கிளில் வரும் மர்மநபர்கள் தங்கச்சங்கிலியை பறித்து சென்று வந்தனர். இதுதொடர்பாக ராஜாஜிநகர் போலீஸ் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருந்தன. மர்மநபர்களை பிடிக்க ராஜாஜிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது. மர்மநபர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டினார்கள்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை இஸ்கான் கோவில் அருகே சாலையில் நடந்து சென்ற ஒருவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் தங்கச்சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இதுபற்றி ராஜாஜிநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற மர்மநபர்களை ராஜாஜிநகர் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் உள்ளிட்ட போலீசார் ஜீப்பில் விரட்டி சென்றனர்.

இந்த நிலையில் இஸ்கான் கோவில் அருகே மோட்டார் சைக்கிளை போலீசார் வழிமறித்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சஞ்சய் (வயது 27), சுபாஷ்(29) என்பதும், இவர்கள் 2 பேரும் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து தங்கச்சங்கிலியை பறித்ததும் தெரியவந்தது. இதனால் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களை விசாரணைக்காக அழைத்து செல்ல முயன்றனர்.

இந்த சந்தர்ப்பத்தில் சஞ்சயும், சுபாசும் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டு சரண் அடைந்துவிடும்படி சஞ்சய், சுபாசுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்ப முயன்றனர். இதனால் சஞ்சய், சுபாசை நோக்கி இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் துப்பாக்கியால் சுட்டார்.

இதில் அவர்கள் 2 பேரின் கால்களிலும் குண்டுகள் துளைத்தன. இதனால் 2 பேரும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தார்கள்.

இதையடுத்து 2 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபோல தாக்குதலில் காயம் அடைந்த போலீஸ்காரர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து ராஜாஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 வாலிபர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தங்கச்சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை சுட்டுப்பிடித்த ராஜாஜிநகர் போலீசாரை பாராட்டி உள்ள பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த், ராஜாஜிநகர் போலீசாருக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை பரிசாக வழங்கி உள்ளார்.

Next Story