மன்னார்குடி, திருத்துறைப்பூண்டியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி, திருத்துறைப்பூண்டியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி,
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மன்னார்குடி கிளை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பு ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மன்னார்குடி பெரியார் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் யேசுதாஸ் தலைமை தாங்கினார். இதில் கிளை செயலாளர் பிச்சைக்கண்ணு, பொருளாளர் பாஸ்கரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ஆறுமுகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட தலைவர் தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கடந்த மாதம் 15-ந்தேதி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் ஆத்துப்பாக்கம்,நேமலூர் ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட தலைவர்கள் தேசிய கொடியேற்றாமல் தடுக்கப்பட்டதை கண்டித்தும், திருவள்ளூர் மாவட்டம் அருமந்தை, கோவை மாவட்டம் ஜெ.கிருஷ்ணாபுரம், திருவண்ணாமலை மாவட்டம் அரியாக்குஞ்சூர், திருப்பூர் மாவட்டம் கவுண்டச்சிபாளையம், சேலம் மாவட்டம் டி.கோணகம்பாடி ஆகிய ஊராட்சிகளிலும் தாழ்த்தப்பட்ட தலைவர்களை அவமதிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தாழ்த்தப்பட்ட ஊராட்சி தலைவர்கள், துணைதலைவர்களின் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
இதேபோல் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் வக்கீல் தாயுமானவன் தலைமையில் திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் சண்முகம் முன்னிலை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, ரகுராமன், தெற்கு ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சாமிநாதன், பாண்டியன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வேதரெத்தினம் மற்றும் நகர குழு உறுப்பினர்கள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story