நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு: நடிகை ரியாவிடம் 4-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை - இன்றும் ஆஜராக உத்தரவு


நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு: நடிகை ரியாவிடம் 4-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை - இன்றும் ஆஜராக உத்தரவு
x
தினத்தந்தி 1 Sep 2020 12:22 AM GMT (Updated: 1 Sep 2020 12:22 AM GMT)

நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக நடிகை ரியாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 4-வது நாளாக தீவிர விசாரணை நடத்தினர். இன்றும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.

மும்பை,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். 34 வயது இளம் நடிகரான அவரது மரணம் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில், பீகாரில் வசித்து வரும் சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் பேரில், சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி (வயது28) மீது தற்கொலைக்கு தூண்டுதல், பணமோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பீகார் அரசின் பரிந்துரையை ஏற்று சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மும்பை சாந்தாகுருசில் உள்ள டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் மாளிகையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்த் சிங்குடன் தங்கியிருந்த அவரது நண்பர் சித்தார்த் பிதானி, கணக்காளர் ராஜத் மேவதி, மேலாளர் சாமுவேல் மிரந்தா, சமையல்காரர் நீரஜ் சிங், வீட்டு வேலைக்காரர் கேசவ் ஆகியோரிடம் அவர்கள் பல முறை விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் நடிகை ரியாவிடம் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணையை தொடங்கினர். 4-வது நாளாக நேற்றும் விசாரணை நடந்தது. இதற்காக அவர் காலை 11 மணி அளவில் சாந்தாகுருசில் உள்ள டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் மாளிகைக்கு வந்து ஆஜரானார். அவருடன் காரில் அவரது சகோதரர் சோவிக்கும் வந்திருந்தார். இரவு 9 மணி வரை விசாரணை நடந்தது. அதன்பிறகு அவர் வீடு திரும்பினார்.

கடந்த 4 நாட்களில் நடிகை ரியாவிடம் சுமார் 36 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. ஆனாலும் சி.பி.ஐ.க்கு தேவையான தகவல்களை ரியாவிடம் இருந்து பெற முடியவில்லை என்பதால், இன்றும் (செவ்வாய்க்கிழமை) ஆஜராக அவருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடர்ச்சியாக 5-வது நாளாக விசாரணை நடத்தப்பட இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்றைய விசாரணையின் போது சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் சுருதி மோடி, சமையல்காரர் நீரஜ் சிங் ஆகியோரும் ஆஜராகி இருந்தனர்.

Next Story