கடலூர் சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் ஆய்வு


கடலூர் சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 1 Sep 2020 12:46 AM GMT (Updated: 1 Sep 2020 12:46 AM GMT)

புதுவை- கடலூர் சாலையில் சிங்கார வேலர் சிலை முதல் ரெயில்வே கேட் வரை சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.

புதுச்சேரி,

புதுவை கடலூர் சாலையில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை முதல் ரெயில்வே கேட் வரை சமீப காலமாக போக்குவரத்து நெருக்கடி அதிக அளவில் ஏற்பட்டது. குறிப்பாக வணிக வளாகம், நீதிமன்றம் போன்றவை வந்தபின் இங்கு வந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் எந்த நேரமும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வந்தன.

இதைத்தொடர்ந்து இந்த சாலையில் போக்குவரத்தை முறைப்படுத்தக்கோரி கலெக்டருக்கு புகார்கள் சென்றன. அதன்படி சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களை அகற்றி ரோட்டின் நடுவில் தடுப்புசுவர் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கலெக்டர் அருண் உத்தரவிட்டார்.

அதன்பேரில் மின்துறை ஊழியர்கள் கடந்த சில நாட்களாக சாலையின் நடுவில் இருந்த மின் கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தற்போது அந்த கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன.

அடுத்கட்டமாக சாலையின் நடுவே தடுப்புச்சுவர் சுமார் 3 அடி உயரத்தில் எழுப்பப்பட உள்ளது. சிங்கார வேலர் சிலை முதல் ரெயில்வே கேட் வரை இந்த தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. கோர்ட்டு எதிரே மட்டும் வாகனங்கள் திரும்பி செல்வதற்கு வழி ஒன்றும் அமைக்கப்படுகிறது.

இதற்கான குறியீடுகளும் தற்போது வரையப்பட்டு உள்ளன. இந்த பணிகளை நேற்று போக்குவரத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் ஆய்வு செய்தார். மேலும் அவர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஏழுமலையிடம் தடுப்புசுவர் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு முருகவேலு, இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story