அதிகாரிகளால் எல்லை நிர்ணயம் செய்யப்படும்: கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் முழு ஊரடங்கு - மாவட்ட கலெக்டர் அருண் தகவல்


அதிகாரிகளால் எல்லை நிர்ணயம் செய்யப்படும்: கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் முழு ஊரடங்கு - மாவட்ட கலெக்டர் அருண் தகவல்
x
தினத்தந்தி 1 Sep 2020 12:54 AM GMT (Updated: 1 Sep 2020 12:54 AM GMT)

புதுவை மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் அதிகாரிகளால் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு அப்பகுதிகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் அருண் கூறியுள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள கூடுதல் தளர்வுகள் புதுவை, காரைக்காலில் அமல்படுத்தப்படும். அதன்படி புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் கடைகள், ஓட்டல்கள், மதுபான கடைகள் வருகிற 30-ந் தேதி வரை தினமும் காலை 6 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். இரவு 9 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். புதுச்சேரி கடற்கரை சாலை தினமும் காலை 5 முதல் பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

மாகி, ஏனாம் பிராந்தியங்களில் ஊரடங்கு தொடர்பாக அந்தந்த பிராந்திய நிர்வாகிகள் அறிவிப்பு வெளியிடுவார்கள். பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் வருகிற 30-ந் தேதி வரை திறக்க தடை விதிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள்(50 சதவீதம் மட்டும்) அது தொடர்பான பணிகளுக்காக பள்ளிகளுக்கு வர வருகிற 21-ந் தேதிக்கு பிறகு அனுமதிக்கப்படுவார்கள்.

ஐ.டி.ஐ., தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் திறன் தொழிலாளர்களை உருவாக்கும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 21-ந் தேதிக்கு பின்னர் அனுமதி அளிக்கப்படும். முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள், முதுநிலை தொழில்படிப்பு மாணவர்கள் ஆய்வகப் பயிற்சிகளுக்காக வருகிற 21-ந் தேதிக்கு பிறகு அனுமதிக்கப்படுவார்கள்.

அரசியல் நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகள், சமூக, கல்வி, கலாசார நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகளில் வருகிற 20-ந் தேதி முதல் 100 பேர் கலந்து கொள்ளலாம். திரையரங்குகள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள், கலையரங்குகள் திறக்க தொடர்ந்து தடை உள்ளது.

கொரோனா வைரஸ் அதிகமாக உள்ள இடங்களில் மாவட்ட அதிகாரிகளால் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படும். திருத்தப்பட்ட எல்லைகளுடன் கூடிய கட்டுப்பாட்டு மண்டல பகுதிகள் குறித்த விவரம் மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்படும். அதன்பின் தளர்வு இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

இந்த பகுதியில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடுமையான முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே வர முடியும். இந்த பகுதியில் வீடு வீடாக கண்காணிக்க உள்ளோம்.

65 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும், கர்ப்பிணிகளும், 10 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். பொதுமக்கள் கண்டிப்பாக ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும். முககவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அதே போல் வெளியே வரும் போது 6 அடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதுவையில் 32 இடங்களில் நேற்று முதல் உள்ளூர் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியதை தொடர்ந்து நேற்று மாவட்ட கலெக்டர் அருண், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதில் உள்ளூர் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது எந்த தேதி முதல் எத்தனை நாட்கள்அமல்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்படாமல் குளறுபடியாகவே உள்ளது.

Next Story