உடல் நலமின்றி இருந்த அண்ணனை காண வந்தபோது பரிதாபம்: வீட்டுத்திண்ணையில் அமர்ந்த பெண் டிராக்டர் மோதி சாவு


உடல் நலமின்றி இருந்த அண்ணனை காண வந்தபோது பரிதாபம்: வீட்டுத்திண்ணையில் அமர்ந்த பெண் டிராக்டர் மோதி சாவு
x
தினத்தந்தி 1 Sept 2020 6:42 AM IST (Updated: 1 Sept 2020 6:42 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டு அருகே வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்து இருந்த பெண் மீது டிராக்டர் மோதியதில் பரிதாபமாக பலியானார்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே குமாரராஜூப்பேட்டை கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலமில்லை என்று கூறப்படுகிறது. இவரது தங்கை செல்வி (வயது 38). செல்வி தனது கணவர் நித்தியானந்தம், மற்றும் 3 மகள்களுடன் திருத்தணி நகரில் உள்ள எம்.ஜி.ஆர்.தெருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் தனது அண்ணனுக்கு உடல் நலம் சரியில்லை என்று கேள்விப்பட்ட செல்வி அவரை பார்க்க குமாரராஜூப்பேட்டை கிராமத்திற்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் செல்வி அவரது வீட்டு திண்ணையில் உட்கார்ந்து இருந்தார்.

அப்போது அவரது அண்ணன் மகன் தீனா(20) என்பவர் வேகமாக ஓட்டி வந்த டிராக்டர் நிலைத்தடுமாறி திண்ணையில் அமர்ந்து இருந்த செல்வி மீது பயங்கரமாக மோதி நின்றது. இதில் படுகாயம் அடைந்த செல்வி அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இதைக்கண்ட தீனா பயந்து அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் பள்ளிப்பட்டு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய தீனாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story