கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாணவர் பலி மற்றொரு மாணவர் மாயம்


கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாணவர் பலி மற்றொரு மாணவர் மாயம்
x
தினத்தந்தி 1 Sept 2020 7:04 AM IST (Updated: 1 Sept 2020 7:04 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவர் பலியானார். மற்றொரு மாணவர் மாயமானார்.

திருவொற்றியூர்,

சென்னை தண்டையார்பேட்டை துர்காதேவி நகரைச் சேர்ந்தவர் விஜய்(வயது 17). சுந்தரம்பிள்ளை நகரைச் சேர்ந்தவர் ராகுல் திராவிடகுமார் (17). அதே பகுதியை சேர்ந்தவர் ஷேக்(17). நண்பர்களான இவர்கள் 3 பேரும் பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு கல்லூரியில் சேர இருந்தனர்.

தற்போது பிரபல செல்போன் நிறுவனத்தின் சிம் கார்டுகளை விற்பனை செய்து வந்தனர். நண்பர்கள் 3 பேரும் நேற்று காலை திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் கடற்கரை பகுதிக்கு வந்தனர். பின்னர் விஜய், ராகுல் திராவிடகுமார் இருவரும் கடலில் குளித்து விளையாடினார்கள். ஷேக் கரையில் இருந்தார்.

அப்போது திடீரென்று கடலில் தோன்றிய ராட்சத அலை விஜய், ராகுல் திராவிட குமார் இருவரையும் கடலுக்குள் இழுத்துச்சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷேக், தனது நண்பர்களை காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார்.

உடனே அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த மீனவர்கள் கடலுக்குள் நீந்தி சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராகுல் திராவிடகுமாரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

மற்றொரு மாணவர் விஜய், கடல் அலையில் சிக்கிக்கொண்டார். கடலில் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராட்சத அலையில் சிக்கி மாயமான விஜயை தேடி வருகின்றனர்.


Next Story