திருச்சி மாவட்ட எல்லைக்குள் இன்று முதல் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கம் - தனியார் பஸ்கள் ஓடாது
திருச்சி மாவட்ட எல்லைக்குள் இன்று முதல் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. தனியார் பஸ்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி,
தமிழகத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டத்திற்குள் அரசு பஸ்களை இயக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்திற்குள் இன்று முதல் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் சமூக விலகலை கடைப்பிடிக்கும் வகையில் பஸ்களில் 50 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்றிச்செல்ல வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
கடந்த ஜூன் மாதம் குறிப்பிட்ட நாட்கள் மண்டலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், மற்ற மாவட்டங்களுக்கும் பஸ்சில் பயணிகள் சென்றுவர முடிந்தது. கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், பஸ்கள் இயக்குவது தடை செய்யப்பட்டு பின்னர் மாவட்டத்திற்குள் இயக்கப்பட்டன. கடந்த ஜூலை மாதம் முதல் பஸ் மற்றும் சிறப்பு ரெயில் போக்குவரத்து முடக்கப்பட்டன. இந்நிலையில் இன்று முதல் மாவட்டத்திற்குள் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது.
திருச்சி மாவட்டத்தில் இன்று முதல் அரசு பஸ்களை இயக்குவது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல துணை மேலாளர்(வணிகம்) சிங்காரவேலு கூறியதாவது:-
திருச்சி மாவட்டத்திற்குள் சமூக இடைவெளியை கடைபிடித்து, அரசின் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளுக்கு ஏற்ப 50 முதல் 60 சதவீதம் வரை பஸ்கள் இயக்கப்பட உள்ளது. திருச்சி மண்டலத்திற்குள் புறநகர் பகுதியில் 490 பஸ்களும், நகர்ப்புறங்களில் 440 பஸ்களும் கொரோனாவுக்கு முன்பு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்தன. தற்போது இவற்றில் 50 சதவீத பஸ்கள்தான் இயக்கப்படுகிறது. பயணிகள் வருகைக்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
திருச்சி மத்திய பஸ் நிலையம் மற்றும் திருச்சி மண்டல பணிமனைகளில் இருந்து அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பஸ்கள் இயக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் இருந்து பள்ளகம் வரையிலும் (அரியலூர் மாவட்ட எல்லை), தேவராயநேரி (தஞ்சை மாவட்ட எல்லை), பாடாலூர் (பெரம்பலூர் மாவட்ட எல்லை), தொட்டியம் (நாமக்கல் மாவட்ட எல்லை), பெட்டவாய்த்தலை (கரூர் மாவட்ட எல்லை) வரையிலும் பஸ்கள் இயக்கப்படுகிறது. மதுரை, திண்டுக்கல் மாவட்ட எல்லைகளுக்கு பஸ்கள் இயக்குவது தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் கலந்தாலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இன்று முழுமையாக எல்லைகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் மாவட்டத்திற்குள் தனியார் பஸ்களை இயக்குவதா? வேண்டாமா? என்பது குறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினர். முடிவில் தனியார் பஸ்களை ஓட்டுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட தனியார் பஸ்கள் உரிமையாளர் சங்க தலைவர் ஜெயகோபால் கூறியதாவது:-
திருச்சி நகர்ப்புறங்களில் 140, புறநகர் பகுதிகளில் இதர மாவட்டங்களையும் சேர்த்து 240 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா ஊரடங்கு தடையால் அந்த பஸ்கள் இயக்கப்படவில்லை. தற்போது அரசு, தனியார் பஸ்களை 50 சதவீத பயணிகளுடன், அதுவும் மாவட்ட எல்லைக்குள்தான் இயக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளது. 60 பயணிகள் சென்ற ஒரு பஸ்சில் 30 பயணிகளை மட்டும் ஏற்றிக்கொண்டு செல்ல வேண்டும்.
தற்போது டீசல் விற்கிற விலைக்கு அது கட்டுப்படியாகாது. மேலும் கூடுதல் பயணிகளை ஏற்றிச்சென்றால் சோதனை செய்து அபராதம் கட்ட சொல்வார்கள். மாவட்டத்திற்குள் துறையூர், முசிறி, தொட்டியம், மணப்பாறை, துவாக்குடி ஆகிய பகுதி வரையே இயக்க முடியும். பிறமாவட்டங்களுக்கும் பஸ்கள் சென்றால்தான் பயணிகள் வருவார்கள். எனவே, அதிக அளவில் நஷ்டம் ஏற்படும் எனக்கருதி தனியார் பஸ்களை இயக்குவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டத்திற்குள் அரசு பஸ்கள் இயக்கப்படுவதையொட்டி, நேற்று திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் துப்புரவு பணியாளர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களும் பராமரிக்கப்பட்டு, தொழிலாளர்களால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story