இன்று முதல் திறப்பு வணிக வளாகங்களில் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம் வியாபாரிகள் மகிழ்ச்சி


இன்று முதல் திறப்பு வணிக வளாகங்களில் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம் வியாபாரிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 1 Sep 2020 1:46 AM GMT (Updated: 1 Sep 2020 1:46 AM GMT)

தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து வணிக வளாகங்கள் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி வணிக வளாகங்களில் தூய்மை மற்றும் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்தன. வியாபாரிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சென்னை,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தமிழகத்தில் வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள், மற்றும் பெரிய கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வணிக வளாகங்கள் பெரிய கடைகள் திறக்கப்பட இருக்கின்றன.

இதையொட்டி நேற்று வணிக வளாகங்களில் சீரமைப்பு மற்றும் தூய்மை பணிகள் நடைபெற்றன. 5 மாதங்களுக்கு பிறகு வணிக நிறுவனங்கள் திறக்கப்படுகிறது என்பதால், வளாகத்தின் அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணிகள் தீவிரமாக நடந்தது. இதில் ஏராளமான பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வணிக வளாகங்களை சுத்தம் செய்தனர்.

அதேபோல திரையரங்குகள் கொண்ட வணிக வளாகங்களிலும் நேற்று தூய்மை, சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்தது. ஆனால் அந்த வணிக வளாகங்கள் இன்று திறக்கப்படுமா? என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான முடிவு எதுவும் வரவில்லை என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக ஜவுளிக்கடைகள், அலங்காரப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் நேற்று மும்முரமாக பணிகள் நடந்தன. அரசின் பாதுகாப்பு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க ஆங்காங்கே விழிப்புணர்வு வாசகங்களை ஒட்டியுள்ளனர். மீண்டும் கடைகள் திறக்கப்படுவதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது.

5 மாதங்களாக வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தோம். தற்போது வணிக வளாகங்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்பார்த்த வியாபாரம் நடக்குமா? என்பது தெரியாத போதும், இப்போதுள்ள சூழ்நிலையில் இது எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அதேவேளை வணிக வளாகங்களில் திரையரங்கு பிரிவில் ஏராளமான பணியாளர்கள் வேலை பார்க்கிறார்கள். எனவே அவர்களின் நிலையையும் கருத்தில் கொண்டு திரையரங்குகளையும் திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story