மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் பலத்த மழை - வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி


மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் பலத்த மழை - வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 1 Sept 2020 3:15 AM IST (Updated: 1 Sept 2020 7:22 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் பெய்தது. இதனால் மத்தூர் பகுதியில் வீடுகளில் தண்ணீர் புகுந்தததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் காலை முதல் கடும் வெயில் அடித்தது. இந்த நிலையில் மாலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இரவில் மழை பெய்யத் தொடங்கியது. நள்ளிரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. அத்துடன் சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் இரவில் மின்தடை ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், முதன்மை கல்வி அலுவலக வளாகம் மற்றும் பெரும்பாலான மண் சாலைகள் சேறும், சகதியுமாக மாறியது. அரசு பள்ளி வளாகத்தில் செயல்படும் காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக காணப்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் சிரமத்திற்குள்ளாகினர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- ராயக்கோட்டை-67, கிருஷ்ணகிரி-50.2, ஊத்தங்கரை-43, போச்சம்பள்ளி - 40.2, பாரூர்-28, சூளகிரி-26, நெடுங்கல்-23, அஞ்செட்டி-10.5, ஓசூர்-2 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 289.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் நேற்று காலை 4 மணி வரையில் பலத்த மழை பெய்தது. இதில் கவுண்டனூர் ஊராட்சி கோடிபதி கிராமத்தில் கனமழை பெய்ததால் தெருக்களில் வெள்ளம் தேங்கி நின்றது. கோடிபதி கீழ் வீதியில் வடிகால் வசதியின்றி புதிய சிமெண்டு சாலை போடப்பட்டதால் மழைநீர் 2 அடி உயரம் வரையில் தேங்கி நின்றது. அந்த பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. வீடுகள் முன்பு தண்ணீர் தேங்கி நின்றதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

மேலும் வீதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்படலாம் என அந்த பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே ஊராட்சி நிர்வாகம் நிரந்தரமாக மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story