ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் வாலிபர் குத்திக்கொலை; நண்பர் காயம் - 9 பேர் கும்பல் வெறிச்செயல்
ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவருடைய நண்பர் காயம் அடைந்தார். இந்த சம்பவத்தில் 9 பேர் கும்பல் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் கள்ளர்தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் என்பவரின் மகன் அருண் பிரகாஷ் (வயது 22) . இவர் தனது நண்பரான அதேபகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் யோகேஸ்வரன் (23) என்பவருடன் ராமநாதபுரம் வசந்த நகர் விலக்கு ரோடு பகுதியில் ஏ.டி.எம். மையம் அருகே நேற்று பிற்பகலில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் சுற்றிவளைத்து 2 பேரையும் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த வாலிபர்கள் 2 பேரும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அருண்பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். யோகேஸ்வரன் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து இதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கொலையில் ஈடுபட்டவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கொலை நடந்த பகுதியில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story