கோவில்கள், பஸ் பணிமனைகளை கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்திய பணியாளர்கள்


கோவில்கள், பஸ் பணிமனைகளை கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்திய பணியாளர்கள்
x
தினத்தந்தி 31 Aug 2020 10:15 PM GMT (Updated: 1 Sep 2020 2:23 AM GMT)

கொரோனா ஊரடங்கில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கலாம் என்றும், மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததையடுத்து பணியாளர்கள் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

காரைக்குடி, 

ஊரடங்கு தளர்வில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாவட்டத்திற்குள் பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள் மற்றும் சிவகங்கை, சமஸ்தானத்திற்குட்பட்ட கோவில்கள், தனியார் கோவில்கள் ஆகியவைகளில் நேற்று கோவில் அதிகாரிகள் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் கோவில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சிவகங்கையில் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில், மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களில் நேற்று முதல் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சில கோவில்களில் உள்பிரகாரங்களில் கோவில் பணியாளர்கள் தண்ணீர் விட்டு சுத்தப்படுத்தி, கோவில் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சில கோவில்களில் கோவில் கோபுர வாசல், தெப்பக்குளம் ஆகிய பகுதியில் கிருமி நாசினி மற்றும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், தேவகோட்டை உள்ளிட்ட போக்குவரத்து கிளை அலுவலகங்களில் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களை பணியாளர்கள் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். அரசு பஸ் பணி மனைகளில் போக்குவரத்து கழக மேலாளர் முன்னிலையில் போக்குவரத்து கழக பணியாளர்கள் பஸ்களை இயக்க செய்து அவற்றில் உள்ள உதிரி பாகங்கள் சரியாக உள்ளதா என்றும், பிரேக் சரியான முறையில் வேலை செய்கிறதா என்றும் இயக்கி பார்த்தனர். அதன் பின்னர் பஸ்களில் உள்புறமும், வெளிபுறமும் தண்ணீர் விட்டு சுத்தப்படுத்தி பஸ்கள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மாவட்டத்திற்குள் பஸ்களை இயக்க அரசு அனுமதித்த நிலையில், அரசு மற்றும் தனியார் பஸ்கள் வருகையை யொட்டி, சிங்கம்புணரி தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமது உத்தரவின்பேரில் துப்புரவு மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் மற்றும் துணை மேற்பார்வையாளர் தென்னரசு ஆகியோர் முன்னிலையில் பஸ் நிலைய வணிக வளாகம் மற்றும் பயணிகள் இருக்கை, கழிவறை போன்ற பகுதிகளில் கிருமி நாசினி மற்றும் பிளச்சிங் பவுடர்கள் தெளிக்கப்பட்டது.

பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வருகையையொட்டி சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சிங்கம்புணரியில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவில், ஸ்ரீசேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் போன்ற பகுதிகளில் சுத்தம் செய்யும் பணியும், கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் பேரூராட்சி சார்பில் நடைபெற்றது.

Next Story