வீட்டை காலி செய்யக்கோரி முதியவருக்கு அடி, உதை - மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் மனு
வீட்டை காலி செய்யக் கோரி, கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அடியாட்களுடன் வந்து முதியவரை அடி, உதைத்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த முதியவர் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் தொலைப் பேசி வழி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தொலைப்பேசி மூலமாகவும், வாட்ஸ் அப் மூலமாகவும் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
பொதுமக்கள் பலர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேரடியாக கோரிக்கை மனுக்கள் அளிக்க வந்தனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் முன்பு பொதுமக்களிடம் மாவட்ட வழங்கல் அலுவலர் அரிதாஸ் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
செங்கம் தாலுகா பழைய குயிலம் கிராமம் நேதாஜிநகரை சேர்ந்த அய்யாவு (வயது 85) என்பவர் மனு அளிக்க ஆட்டோவில் வந்தார். அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவன். எனக்கு 85 வயதாகிறது. எனது கை, கால்கள் செயலிழந்து விட்டன. இந்த நிலையில் எனது கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அடியாட்களுடன் எனது வீட்டுக்கு வந்து, நான் குடியிருக்கும் வீட்டை காலி செய்ய வேண்டும், என்று மிரட்டினர்.
மேலும் அவர்கள் என்னை அடித்து, உதைத்தனர். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனது வீட்டுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், என்னை தாக்கியவர்கள் மீது நடவடி க்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
செங்கம் தாலுகா சி.நம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் மக்கள் பாதை இயக்கத்தின் புதுப்பாளையம் ஒன்றிய செயலாளராக உள்ளேன். சி.நம்மியந்தல் ஊராட்சியில் முறைகேடுகள் நடக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் சென்று கேட்டேன். அவரின் அக்காள் ஊராட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.
முறைகேடுகள் குறித்து ஆதாரப்பூர்வமாகக் கேள்வி கேட்டால் அக்காளின் கணவர், என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கின்றார். மேலும் எனது வீட்டுக்கும் சரிவர குடிநீர் வினியோகிக்கவில்லை. அரசின் எந்தத் திட்டத்திலும் என்னை பயன்பெற விடாமல் தடுக்கின்றனர். முறைகேடுகள் செய்த பணத்தை மீண்டும் ஊராட்சி வளர்ச்சிக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் அங்கன்வாடி பணியாளர். கலப்பு திருமணம் செய்து கொண்டேன். எங்க ளுக்கு ஒரு குழந்தை உள்ளது. நாங்கள் குடும்ப செலவுக்காக ஒருவரிடம் கடனுக்கு பணம் வாங்கினோம். தற்போது என்னால் வட்டிக் கட்ட முடியவில்லை. இதைப் பயன்படுத்தி கடன் கொடுத்த நபர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்கிறார்.
அவரது விருப்பத்துக்கு நடக்கக்கோரி பாலியல் தொல்லை கொடுக்கிறார். எனது ஏ.டி.எம். கார்டையும் பறித்துக் கொண்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story