வேலூர் அருகே, திருமணமான 7 நாட்களில் பெண் தீக்குளித்து தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
திருமணமான 7 நாட்களில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்,
வேலூரை அடுத்த ஜி.ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் மகாதேவமந்திரி. இவருடைய மகள் சந்திரலேகாவிற்கும் (வயது 24) காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்தை சேர்ந்த பாலாஜி (34) என்பவருக்கும் கடந்த 23-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவியும் விருந்து அழைப்பிற்காக (மறு வீடு) ஜி.ஆர்.பாளையத்துக்கு வந்துள்ளனர். நேற்று முன்தினம் வீட்டு மாடியில் உள்ள அறையில் சந்திரலேகா தனியாக இருந்துள்ளார்.
குடும்பத்தினர் அனைவரும் கீழ்தளத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் மாடியில் திடீரென அலறல் சத்தம் கேட்டது. அதையடுத்து கணவர் பாலாஜி உள்பட குடும்பத்தினர் அனைவரும் மாடிக்கு சென்று பார்த்தனர். குளியலறையில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் குளியறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சந்திரலேகா உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டது தெரிய வந்தது.
உடனடியாக சந்திரலேகாவை அவர்கள் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அரியூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வேலூர் மாஜிஸ்திரேட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று சந்திரலேகாவிடம் மரண வாக்குமூலம் பெற்றார்.
இந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அரியூர் போலீசார் வழக்குப்பதிந்து குடும்ப பிரச்சினை காரணமாக சந்திரலேகா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது பிரச்சினை உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து வேலூர் உதவி கலெக்டர் கணேஷ் மேல் விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 7 நாளில் துப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story