கடலூர் பணிமனையை அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் முற்றுகை - சம்பளம் வழங்காததை கண்டித்து நடத்தினர்


கடலூர் பணிமனையை அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் முற்றுகை - சம்பளம் வழங்காததை கண்டித்து நடத்தினர்
x
தினத்தந்தி 1 Sept 2020 4:15 AM IST (Updated: 1 Sept 2020 8:45 AM IST)
t-max-icont-min-icon

சம்பளம் வழங்காததை கண்டித்து கடலூர் அரசு போக்குவரத்து பணிமனையை தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

கடலூர்,

கடலூர் அரசு போக்குவரத்து பணிமனைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு வழக்கமாக மாத இறுதியில் சம்பளம் வழங்கப்பட்டு விடும். ஆனால் கடந்த மாதத்திற்கான (ஆகஸ்டு) சம்பளத்தை கடைசி நாளான நேற்று நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து நேற்று அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அனைவரும் கடலூர் பணிமனை முன்பு ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள் பணிமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு தொ.மு.ச. பொதுச்செயலாளர் தங்க. ஆனந்தன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. சம்மேளன துணை தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில் எம்.எல்.எப். பொதுச்செயலாளர் மணிமாறன், ஏ.ஏ.எல்.எல்.எப். பொதுச்செயலாளர் கருணாநிதி, ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் சாமிநாதன், சி.ஐ.டி.யு. தலைவர் ஜான்விக்டர், எல்.பி.எப். அமைப்பு செயலாளர் பாலவிநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் டி.வி.கே. பொதுச்செயலாளர் தணிகாசலம், எம்.எல்.எப். துணை தலைவர் பாலகிருஷ்ணன், தொ.மு.ச. ஜெயராவ், ராஜாங்கம், ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அதன்பிறகு பணிமனை வாசலில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். இருப்பினும் முக்கிய நிர்வாகிகள் போக்குவரத்து பணிமனை வணிக மேலாளர் சுந்தரத்திடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இன்று (நேற்று) சம்பள பில் வழங்கி விடுகிறோம். நாளை (அதாவது இன்று) அனைவருக்கும் சம்பளம் கிடைத்து விடும். வருங்காலங்களில் மாத இறுதியில் சம்பளம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை கேட்டதும் போராட்டத்தை விலக்கிக்கொண்டு தொழிற்சங்கத்தினர் கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் பணிமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story