ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் இன்று முதல் கோவில்கள் திறப்பு - பக்தர்களுக்கு கைகளில் பிரசாதம் வழங்கப்படாது


ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் இன்று முதல் கோவில்கள் திறப்பு - பக்தர்களுக்கு கைகளில் பிரசாதம் வழங்கப்படாது
x
தினத்தந்தி 1 Sep 2020 5:15 AM GMT (Updated: 1 Sep 2020 5:09 AM GMT)

ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கோவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கோவில்கள் திறக்கப்படுகின்றன. பக்தர்களுக்கு கைகளில் பிரசாதம் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோவை,

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் உள்ள கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. கோவில்களில் மூலவருக்கு தினமும் அபிஷேகம், தீபாராதனை, அலங்காரங்கள் நடைபெற்றன. ஆனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் கிராமப்புறங்களில் உள்ள ரூ.10 ஆயிரத்திற்கும் கீழ் வருமானம் உள்ள கோவில்களை திறக்க அரசு அனுமதி அளித்தது. மேலும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சிறிய கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கை தளர்த்தி, அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க இன்று முதல் அனுமதி அளித்துள்ளது. மேலும் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. இதன்படி கோவை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோவில்களும் இன்று முதல் திறக்கப்பட உள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கோவையில் மொத்தம் 1,518 கோவில்கள் உள்ளன. இதில் கிராமப்புறங்களில் உள்ள 1,215 கோவில்களில் 700 கோவில்கள் ஏற்கனவே திறக்கப்பட்டன. மீதம் உள்ள கோவில்கள் திறக்கப்படாமல் இருந்து வந்தது. தற்போது அரசு அனுமதி அளித்து உள்ளதால், மாநகராட்சி, நகராட்சி பகுதயில் உள்ள 293 பெரிய கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இதனால் பேரூர் பட்டீஸ்வரர் கோவில், மருதமலை முருகன் கோவில், கோவை மாநகரில் உள்ள கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில் உள்ளிட்ட புகழ் பெற்ற கோவில்களுக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பக்தர்கள் கூட்டம் காரணமாக கொரோனா பரவுவதை தடுக்க அரசின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். ஒவ்வொரு பக்தர்களும் 2 அடி இடைவெளி விட்டு நிறுத்தப்படுவர். பக்தர்கள் தங்களது கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படும். அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.

விபூதி, குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் பக்தர்களின் கைகளில் வழங்கப்படாது. பிரசாதம் பாக்கெட்டுகளில் வைக்கப்பட்டு தனியாக ஒரு தட்டில் வைக்கப்படும். பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரசாதத்தை ஒருவர் பின் ஒருவராக எடுத்துக் கொள்ளலாம். அனைத்து கோவில்களும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது.

ஒரே நேரத்தில் அனைத்து பக்தர்களும் கோவிலுக்கு உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்படுவர். அவர்கள் சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்ததும் அடுத்த பக்தர்கள் குழு அனுப்பப்படும். தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட கருவிகள் அனைத்து கோவில்களுக்கும் தேவையான அளவு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர். இதேபோல் மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Next Story