தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
தேனி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் 5 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி,
தேனி அல்லிநகரம் காந்திநகரை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 60). இவருடைய மகள்கள் பேச்சியம்மாள், முத்தம்மாள். இவர்கள் 3 பேரும், பக்கத்து வீட்டை சேர்ந்த கருப்பையாவின் மகள்கள் அழகம்மாய், பேச்சி ஆகியோரும் தங்களது குழந்தைகளுடன் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அப்போது அவர்கள் 2 கேன்களில் மண்எண்ணெயை மறைத்து எடுத்து வந்தனர்.
கலெக்டர் அலுவலகத்துக்குள் வந்த சிறிது நேரத்தில் அவர்கள் திடீரென்று தங்களின் உடல்களிலும், குழந்தைகளின் மீதும் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று தீக்குளிக்க முயன்ற பெண்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அப்பகுதியில் தள்ளுவண்டி கடையில் குடத்தில் இருந்த தண்ணீரை எடுத்து வந்து அவர்கள் மீது போலீசார் ஊற்றினர்.
பின்னர் அந்த பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், “நாங்கள் 40 ஆண்டுகளாக அருகருகே உள்ள வீடுகளில் குடியிருந்து வருகிறோம். இதற்கிடையே எங்களது வீடுகளை காலி செய்யுமாறு சிலர் மிரட்டுகின்றனர். அதில் ஒருவர் திருநங்கைகளை தூண்டிவிட்டு தகராறு செய்கிறார். கடந்த 29-ந்தேதி 6 பேர் கும்பலாக வந்து எங்கள் வீடுகளில் இருந்தவர்களை தாக்கி மிரட்டினர். எனவே, எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்றனர்.
இதையடுத்து தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக நாகம்மாள், அவருடைய மகள்கள் பேச்சியம்மாள், முத்தம்மாள், கருப்பையா என்பவருடைய மகள்கள் அழகம்மாள், பேச்சி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தைகளுடன் 5 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story