5 மாதங்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறப்பு; பக்தர்கள் மகிழ்ச்சி


5 மாதங்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறப்பு; பக்தர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 1 Sep 2020 6:48 PM GMT (Updated: 1 Sep 2020 6:48 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஈரோடு,

சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கி விட்டது. கோடிக்கணக்கான பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தியாவிலும் அதன் பாதிப்பு அதிக அளவில் இருந்தது. இதைத்தொடர்ந்து கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டன. அதன்படி நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்காரணமாக நாட்டில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு விட்டன. பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதுடன், அனைத்துவிதமான பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

தமிழ்நாட்டிலும் இதே நிலை நீடித்தது. ஈரோடு மாவட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல. குறிப்பாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டதால் பக்தர்கள் கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட முடியாமல் மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்தனர். இதேபோல் கிறிஸ்தவ தேவலாயம் மற்றும் பள்ளி வாசல்கள், தர்காக்களுக்கு செல்ல முடியாமல் பலரும் தவித்தனர். தங்களுடைய இஷ்ட கடவுள்களை வழிபட முடியாமல் பலரும் கடந்த 5 மாதங்களாக ஏங்கி தவித்து வந்தனர். இதற்கு விடிவு காலம் வராதா? என ஒவ்வொரு மதத்தினரும் வீட்டில் இருந்தவண்ணம் வழிபாடு, பிரார்த்தனை செய்தனர்.

வழிபாட்டு தலங்களை திறக்க உத்தரவு

இந்த நிலையில் வழிபாட்டு தலங்களை தளர்வுகளுடன் செப்டம்பர் 1-ந் தேதி திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவில், ‘வழிபாட்டு தலங்களுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நின்று வழிபாடு நடத்த வேண்டும். கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவி சுத்தம் செய்த பின்னரே வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும் வழிபாட்டு தலங்களுக்குள் செல்பவர்களின் உடல் வெப்ப நிலையை அதற்குண்டான நவீன தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்ய வேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்,’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களின் நடைகள் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி மகிழ்ச்சி பொங்க கலந்து கொண்டு சாமியை வழிபட்டு சென்றனர்.

பண்ணாரி அம்மன்

சத்தியமங்கலத்தை அடுத்து பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. தளர்வுகளுடன் நடை திறக்க உத்தரவிடப்பட்டதால் நேற்று கோவில் நடை திறக்கப்பட்டது. இதையொட்டி காலை 6.30 மணி அளவில் கோவில் நுழைவு வாயிலில் பக்தர்கள் காத்து நின்றனர். பின்னர் சமூக இடைவெளி விட்டு பக்தர்கள் வரிசையாக நின்று கோவிலினுள் சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.

முன்னதாக கோவிலுக்கு வந்த பக்தர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்த பின்னரே அவர்களை ஊழியர்கள் உள்ளே செல்ல அனுமதித்தனர். சிறிது தூரம் சென்றதும் அங்கு வைக்கப்பட்டிருந்த தானியங்கி கிருமி நாசினி இயந்திரம் மூலம் தங்களுடைய கைகளை கழுவி சுத்தம் செய்தனர். இதையடுத்து கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்தனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் கோவிலுக்கு வந்ததால் பக்தர்களில் பலர் ‘ஓம் சக்தி, பராசக்தி, பண்ணாரி தாயே’ என பக்தி கோஷங்கள் எழுப்பினர். அம்மனை வழிபட்டதும், அங்கு தட்டில் வைக்கப்பட்டிருந்த விபூதி மற்றும் குங்குமத்தை எடுத்ததுடன், உண்டியலில் தங்களுடைய காணிக்கைகளையும் செலுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினர். 5 மாதத்துக்கு பின்னர் நடை திறக்கப்பட்டாலும் பக்தர்கள் குறைந்த அளவிலேயே கோவிலுக்கு வந்தனர். இதையொட்டி பக்தர்கள் வரிசையில் செல்வதற்கு வசதியாக தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

பவானி

பவானி கூடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் நடை நேற்று அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நீண்ட நாட்களாக கோவில் திறக்கப்படாமல் இருந்ததால் கோவில் நுழைவு வாயில் முன்பு கோமாதாவுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த பூஜையை ஈரோடு ஆதீனமும், கோவில் குருக்களுமான பாலாஜி சிவம் நடத்தினார். இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது.

முன்னதாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் அணியாமல் வந்த பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு குங்குமம் மட்டுமே பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க சாமியை வழிபட்டு சென்றனர்.

இதேபோல் பவானியில் உள்ள செல்லியாண்டி அம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், மேற்கு தெரு மாரியம்மன் கோவில், எல்லையம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களின் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கோவில்களில் வேப்பிலை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.

மேலும் பவானியில் சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம், புனித அமல அன்னை ஆலயம் உள்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் காலை முதலே சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

சென்னிமலை

சென்னிமலை முருகன் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. முதலில் கோமாதா பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நின்று பக்தர்கள் சாமியை வழிபட்டனர். காலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் குறைந்த அளவிலேயே வந்தனர். ஒரு சில பக்தர்கள் தேங்காய் பழம், பூமாலை போன்ற பூஜை பொருட்களை கொண்டு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் பூஜை பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பூஜை பொருட்களை வாகனங்களில் வைத்துவிட்டு பின்னர் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கைக்குழந்தையுடன் வந்த பக்தர்களையும் போலீசார் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. இதன்காரணமாக தங்களுடைய கைக்குழந்தைகளை உறவினர்களிடம் கொடுத்துவிட்டு கோவிலுக்குள் சென்று சாமியை பக்தர்கள் வழிபட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் தினமும் 100 பேருக்கு வழங்கும் அன்னதான உணவு பார்சலாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. இதற்காக 7 மணிக்கு மேல் அடிவாரத்தில் இருந்து மலைப்பாதை வழியாக கோவிலுக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

கொடுமுடி-அந்தியூர்- கோபி

இதையொட்டி சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கொடுமுடியில் உள்ள பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் புனித நீராடி சாமியை வழிபட்டனர்.

அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள பத்ரகாளியம்மன் கோவில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இதேபோல் செல்லீஸ்வரர் கோவில், அழகுராஜா பெருமாள் கோவில், பேட்டை பெருமாள் கோவில், கெட்டி விநாயகர் கோவில், புதுப்பாளையம் குருநாதசாமி கோவில் உள்பட பல்வேறு கோவில்களின் நடைகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கோபி பச்சைமலை முருகன் கோவில் நேற்று நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கோபி சாரதா மாரியம்மன் கோவில் நடை பக்தர்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.

Next Story