புதுச்சேரியில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


புதுச்சேரியில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 1 Sep 2020 10:34 PM GMT (Updated: 1 Sep 2020 10:34 PM GMT)

புதுவையில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கப்படுமா? என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதுச்சேரி,

கொரோனா ஊரடங்கில் 4-வது தளர்வினை தொடர்ந்து தமிழகத்தில் தற்போது மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது. புதுவை மாநிலத்தை பொறுத்தவரை கடந்த 2 மாதமாக குறைந்த அளவிலான பஸ் போக்குவரத்து நடந்து வருகிறது. அதாவது பாகூர், மடுகரை, மதகடிப்பட்டு, கனகசெட்டிகுளம், காரைக்கால் பகுதிகளுக்கு 7 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர முன்கள பணியாளர்களை அழைத்து செல்லவும் சாலை போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒரு மாநில எல்லையை விட்டு பிற மாநில எல்லைக்குள் பஸ் செல்ல வேண்டுமானால் அந்த மாநில அரசின் அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும்.

குறைந்த அளவிலேயே...

அந்த அடிப்படையில் காரைக்காலுக்கு செல்லும் பஸ்சுக்கு கடலூர் மற்றும் நாகை மாவட்ட கலெக்டர் களின் அனுமதிபெற்று பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள நிலையில் பக்கத்து மாவட்டங்களான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு பஸ்களை இயக்க முடியாத நிலை உள்ளது. புதுவையை பொறுத்தவரை மிகக்குறைந்த அளவிலேயே அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது அனைத்து தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் முழுவீச்சில் இயங்க தொடங்கியுள்ளன. தொழிலாளர்கள் போதிய பஸ் வசதியின்றி தங்களது சொந்த வாகனங்களில் சென்று வருகின்றனர். இதனால் அவர்களுக்கு கூடுதல் செலவுகள் ஏற்படுகிறது.

கூடுதல் பஸ்கள்

புதுவையை பொறுத்தவரை தனியார் பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படும். ஆனால் தற்போது உள்ள விதிமுறைகளின்படி பஸ்களை இயக்கினால் நஷ்டம் ஏற்படும் என்பதால் தனியார் பஸ் உரிமையாளர்கள் பஸ்களை இயக்கவில்லை.

இத்தகைய சூழ்நிலையில் புதுவை மக்களின் துயர்துடைக்க புதுவை அரசு பஸ்களை கூடுதலாக இயக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மக்களின் நலன்கருதி தேவையான வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்க புதுவை அரசின் சாலைப்போக்குவரத்து கழகம் (பி.ஆர்.டி.சி.) முன்வர வேண்டும்.

இதற்கிடையில் புதுவை அரசு பஸ்கள் எந்த நேரத்திலும் இயக்கப்படலாம் என்று எதிர்பார்த்து பணிமனைக்கு ஊழியர்கள் வந்தனர். அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.

Next Story