பெண் போலீசை தாக்கி நகையை பறிக்க முயற்சி வழிப்பறி கொள்ளையன் கைது


பெண் போலீசை தாக்கி நகையை பறிக்க முயற்சி வழிப்பறி கொள்ளையன் கைது
x
தினத்தந்தி 1 Sep 2020 10:59 PM GMT (Updated: 1 Sep 2020 10:59 PM GMT)

சென்னை எழும்பூரில் பெண் போலீசை தாக்கி நகையை பறிக்க முயற்சித்து அட்டூழியத்தில் ஈடுபட்ட வழிப்பறி கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் நுண்ணறிவுப் பிரிவில் போலீசாக வேலை செய்பவர் சூரியவதனி (வயது 32). இவரது கணவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். புளியந்தோப்பில் இவர்கள் வசிக்கிறார்கள். சூரியவதனி தினமும் இரவு 9 மணி அளவில், பணி முடிந்த பிறகு தனது கணவரின் ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு செல்வது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு கணவர் வேறு சவாரிக்கு சென்று விட்டதால், சூரியவதனியை ஏற்றிச் செல்ல வரவில்லை. எனவே வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகில் வந்து காத்திருக்குமாறு கணவர் கேட்டுக்கொள்ளவே, சூரியவதனி தனது தோழியான இன்னொரு பெண் போலீசின் மொபட்டில் ஏறி கமிஷனர் அலுவலகம் நோக்கி வந்தார்.

கொள்ளையர்கள் தாக்குதல்

எழும்பூர் காந்தி இர்வின் பாலத்தில் தனது தோழியின் மொபட்டில் இருந்து சூரியவதனி இறங்கிக் கொண்டார். எதிரில் அவரது கணவரும் ஆட்டோவில் வந்துவிட்டார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 கொள்ளையர்கள், சூரியவதனி மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார்கள். அவரது கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயற்சித்தனர்.

ஆனால் சூரியவதனி கொள்ளையர்களுடன் கடும் போராட்டம் நடத்தினார். இதற்குள் சத்தம் கேட்டு ஆட்டோவில் வந்த அவரது கணவரும் உதவிக்கு ஓடிவந்தார். அந்த வழியாக வாகனங்களில் வந்த பொதுமக்களும் கூட்டமாக கூடிவிட்டதால் கொள்ளையர்கள் இருவரும், சங்கிலி பறிப்பு முயற்சியை கைவிட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். அதே கொள்ளையர்கள் எழும்பூர் போலீஸ் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை தாக்கி அவரது செல்போனை பறித்து சென்றுவிட்டனர்.

கொள்ளையன் கைது

இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பெண் போலீஸ் சூரியவதனி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை அடிப்படையாக வைத்து எழும்பூர் போலீசார் தப்பி ஓடிய கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்கினார்கள். அவர்களை பிடிக்க துணை கமிஷனர் தர்மராஜன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர்கள் சேட்டு, ஜெயசித்ரா ஆகியோர் தலைமையில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் அதிரடியாக செயல்பட்டு, வழிப்பறி கொள்ளையர்களில் ஒருவரான ரஞ்சித் என்பவரை நேற்று கைது செய்தனர். இவர் சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர். இன்னொரு கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

Next Story